"இப்படி ஒரு காற்றை நாங்க பாத்ததே இல்ல!" − சீலையம்பட்டியை சூறையாடிய சூறைக்காற்று!

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ளது சீலையம்பட்டி கிராமம். நேற்று மாலை 5 மணிக்கு ஆரம்பித்த மழை மெல்ல மெல்லக் கனமழையாக மாறி, சூறைக்காற்றுடன் கூடிய மழையாக மாறியது. இதனால் மதுரை − கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு இடங்களில் பெரிய புளிய மரங்கள் வேரோடு சாய்ந்தன.

சூறைக்காற்று

சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்த சுமார் அரைமணி நேரம் ஆனது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையில் தான் இப்படி என்றால், சீலையம்பட்டி கிராமத்திற்குள் சுமார் 10 -கும் மேற்பட்ட இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து சாலையில் விழுந்தன. விபத்து ஏற்படவில்லை என்றாலும், மின்சாரம் இல்லாமல் இரவைக் கழிக்க வேண்டிய சூழல் சீலையம்பட்டி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

சூறைக்காற்று

சூறைக்காற்று பற்றி கிராம மக்களுடன் பேசிய போது, "இப்படி ஒரு சூறைக்காற்று மழையை நாங்கள் இதுவரை பார்த்ததே இல்ல. வந்த கொஞ்ச நேரத்தில் எல்லாத்தையும் அடிச்சு கீழ தள்ளீட்டு போயிருச்சு. போஸ்ட் மரம் சாஞ்சிருக்கு, ரோட்ல மரம் விழுந்துகிடக்கு, வீட்டுக் கூரைகள் பறந்து போயிருச்சு, ஆனாலும் இப்படி ஒரு மழை எப்பவுமே வராது" என்றனர் ஆச்சர்யத்தோடு.

சூறைக்காற்று

விழுந்த மின்கம்பங்களைச் சரிசெய்து மீண்டும் மின்சாரம் தொடச்சியாக வழங்கக் குறைந்தது மூன்று நாள்களாவது தேவைப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், விரைந்து பணிகளை முடித்து மின்சாரம் வழங்க வேண்டும் எனத் கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!