ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவர்கள்!

கண்டன ஆர்பாட்டம்.

கடலூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை  அலுவர்கள், தொழிலாளர்கள்  மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டுக்  கண்டன ஆர்ப்பாட்டம்  நடத்தினர். கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநராகப் பணிபுரிந்து வருபவர் ஆனந்த்ராஜ். இவர் தனது துறையின் கீழ் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள், பெண் ஊழியர்கள், தொழில் நுட்ப  அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் ஆகியோர் மீது கட்டாய விடுப்பு, பணி விடுப்பு, கட்டாய ஓய்வு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் என ஊழியர் விரோத போக்கோடு செயல்பட்டு வருகிறார். இவரின் நடவடிக்கையால் மாவட்டத்தில் இதுவரை 24 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். இவரின் நடவடிக்கையால் தொழிலாளர்களிடையே மன உளைச்சல் ஏற்பட்டு பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்களும், அதிகாரிகளும் உயர் அதிகாரிகளுக்குப் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. மாவட்டத்தில் திட்ட பணிகள் முடங்கியுள்ளது. எனவே இவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றும் 500 -க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டுக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் திட்ட இயக்குநரின் நடவடிக்கையும் கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஒரு துறையின் உயர் அதிகாரியைக் கண்டித்து, அந்தத் துறையில் பணியாற்றும் அதிகாரிகளும். தொழிலாளர்களும் போராட்டம் நடத்தியது கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!