வெளியிடப்பட்ட நேரம்: 03:15 (12/05/2018)

கடைசி தொடர்பு:03:15 (12/05/2018)

அரசு ஊழியர்களின் சம்பளம் பற்றி விவாதிக்க தயாரா? அமைச்சருக்கு ஜாக்டோ ஜியோ சவால்!

ஜாக்டோ ஜியோ

கடலூரில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன்  செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர், ”அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து அரசு ஊழியர்களின் சம்பளம் தொடர்பாகத் தவறான தகவல்களைக் கொடுத்து வருகிறார். இதைக் கண்டிப்பதோடு அரசு ஊழியர்களின் சம்பள பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட்டு எங்களுடன் விவாதிக்கத் தயாரா? என கேள்வி எழுப்பினார்.  மேலும் 20 -ம் தேதி திருச்சியில் ஜாக்டோ ஜியோவின் உயர்மட்ட குழு கூடுகிறது அதற்குள் அரசு எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அப்படி இல்லை என்றால் எங்கள் போராட்டம் மிக வலுவாக இருக்கும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும். 21 மாத ஊதிய நிலுவை தொகை வழங்க வேண்டும்,  ஊதிய முரண்பாடுகளைக் களையவேண்டும். 

110 விதியின் கீழ் சட்ட மன்றத்தில் புதிய பென்சன் திட்டம் ரத்து செய்யப்படும் என ஜெயலலிதா அறிவித்தார். இதைக் கூட செயல் படுத்தாமல் இந்த எடப்பாடி அரசு செயல்பட்டு  வருகிறது. அங்கன்வாடி ஊழியர்கள் சத்துணவு ஊழியர்கள் மற்றும் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு காலமுறை ஊதியம்  வழங்க வேண்டும். இந்த கோரிக்கைக்காக தொடர் போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம்” கூறினார்.