”பிரதமர் மோடி படம் போடவில்லை” -கலெக்டரிடம் புகார் அளித்த பா.ஜ.கவினர்

மோடி

மத்திய அரசின் திட்டங்களுக்கான விளம்பரங்களை மோடி படத்துடன் தான் வெளியிட வேண்டும் எனப் பா.ஜ.க வை சேர்ந்தவர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் புகார்மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை பேரூராட்சிப் பகுதிகளில் மத்திய அரசின் ‘ஆவாஸ் யோஜனா’ எனப்படும் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் பயன்பெற மக்களிடையே அறிவிப்பு செய்து வருகின்றனர். அந்தவகையில், பிளக்ஸ் மற்றும் ஆட்டோ ஒலிபெருக்கி மூலம் செய்யப்படும் விளம்பரங்களில் திட்டத்தின் பெயரோ, மத்திய அரசின் பெயரோ, பிரதமர் மோடியின் படமோ இடம் பெறவில்லை. எனவே, மத்திய அரசின் ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தின் கீழ் என்ற வாசகத்தோடு, பிரதமர் மோடி அவர்களின் படத்தோடு விளம்பரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் புகார்மனு அளித்தனர்.

இதுகுறித்து புகார்மனு அளித்த ஈரோடு மாவட்ட பா.ஜ.க பொதுச்செயலாளர் குணசேகரன் கூறுகையில், “பிரதமர் மோடி அவர்களின் படத்துடன், இது மத்திய அரசின் திட்டம் என விளம்பரம் செய்தால் தான், மத்திய அரசு இப்படி பயனுள்ளதான பல திட்டங்களை வழங்குகிறது என்பது மக்களுக்குத் தெரியவரும். எனவே, தான் அதனை வலியுறுத்தி புகார்மனு அளித்துள்ளோம்” என்றார்.  

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!