`சென்னை இன்ஜினீயரின் 43 நிமிட வாக்குமூலம்'  -  4-வது மாடியிலிருந்து குதித்தவரை காப்பாற்றிய காவலாளி 

இன்ஜினீயர் சபரிநாதன்


சென்னை வடபழனியில் 4-வது மாடியிலிருந்து குதித்த இன்ஜினீயரை காவலாளி ஒருவர் காப்பாற்றியுள்ளார். தற்கொலை முயற்சிக்கு முன், இன்ஜினீயரின் 43 நிமிடம் வாக்குமூலமாகப் பல தகவல்களை தன்னுடைய முகநூலில் பதிவு செய்துள்ளார். 

 சென்னை வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள திரையரங்கம் அருகில் அடுக்குமாடி வணிகவளாகம் உள்ளது. இதில், நான்காவது மாடியிலிருந்து வாலிபர் ஒருவர் குதித்தார். அப்போது ஆபத்பாந்தவனாக அந்த வாலிபரை ஒருவர் காப்பாற்றினார். இதனால், இருவரும் படுகாயமடைந்தனர். இதுகுறித்து வடபழனி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துரு விசாரணை நடத்திவருகிறார். 

காவலாளி தேவசகாயம் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 நான்காவது மாடியிலிருந்து குதித்தவர் சிதம்பரத்தைச் சேர்ந்த சபரிநாதன். 27 வயதாகும் இவர், சென்னை பூந்தமல்லியை அடுத்த குமணன் சாவடியில் தங்கியிருந்தார். இன்ஜினீயரிங் படித்த இவர், வேலை தேடி வந்தார். வேலை கிடைக்காத விரக்தியில்தான் தற்கொலைக்கு முயன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

 

 சபரிநாதனைக் காப்பாற்றியவர் சென்னை அசோக் நகரைச் சேர்ந்த தேவசகாயம். இவர், வணிகவளாகத்தில் செக்யூரிட்டிகளுக்கு மேற்பார்வையாளராகப் பணியாற்றிவருகிறார். சபரிநாதன், மாடியிலிருந்து குதிக்கும்போது பொதுமக்கள் எல்லோரும் அவருக்கு அறிவுரை கூறினாலும் அதைக்கேட்காமல் குதித்தார். அதைப்பார்த்த தேவசகாயம், அவரைத் தன்னுடைய கைகளால் தாங்கிப்பிடித்தார். இதனால்தான் சபரிநாதன் உயிர் பிழைத்தார். இருப்பினும் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. தற்போது இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

 தற்கொலைக்கு முன் சபரிநாதன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் 43 நிமிடம் பேசியுள்ளார். அதில் ``பல தகவல்களைக் குறிப்பிட்டுப் பேசுகிறார். ஏழைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறார். தொடர்ந்து மாணவர்களை மதிப்பெண் அடிப்படையில் மதிக்காதீர்கள். அவர்களின் திறமைக்கு மரியாதை கொடுங்கள். மொழி வேறு, அறிவு வேறு என்பதை புரிந்து  கொள்ள வேண்டும். நான் இன்ஜினீயரிங் கல்லூரியில் சேரும்போது என்னுடைய கட்ஆப் மார்க் அடிப்படையில் நான் கேட்ட பாடப்பிரிவை தரவில்லை. ஆனால், அந்தப் பாடப்பிரிவு வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் நன்கொடை கேட்டது. இதுதான் இன்றைய கல்வி நிலை. கல்வித்திட்டத்தை மாற்றுங்கள்.

 

விவசாயிகளின் நலனில் அரசு அக்கறை செலுத்த வேண்டும். காவிரி நீர் விவகாரத்திலும் அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும். நீட் தேர்வை எழுத தமிழக மாணவர்கள் வேறு மாநிலத்துக்குச் செல்ல வேண்டியதுள்ளது. தமிழ மாணவர்களால் வேறு மாநிலங்களில் எப்படித் தேர்வு எழுத முடியும். காதலிக்க மறுத்த பெண்கள் மீது ஆசிட் வீசுவது தவறு. மது குடித்தால் கோபம் வரும். தயவு செய்து குடிக்காதீர்கள். தவறாக நான் பேசியிருந்தால் நீங்கள் பேசும் போது திருத்திப் பேசுங்கள். நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்துவிட்டேன். நல்ல விஷயங்களைப் பேசுங்கள். தற்கொலைக்கு முன் என் மனம் விட்டு பேசிவிடுகிறேன். என் ஆன்மா சாந்தியடைய இதையெல்லாம் செய்யுங்கள்"  என்று குறிப்பிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!