வெளியிடப்பட்ட நேரம்: 15:03 (12/05/2018)

கடைசி தொடர்பு:15:03 (12/05/2018)

போர்க்களம் போல் மாறிய தஞ்சை - புதுக்கோட்டை சாலை; ராணுவ விமானப் படைத்தளம் முற்றுகை

`ராணுவத்தை அனுப்பாதே... காவிரியை அனுப்பு' என்ற முழக்கத்தை முன் வைத்து தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் உள்ள மத்திய அரசின் ராணுவ விமானப்படை தளத்தை முற்றுகையிட்டு காவிரி உரிமை மீட்புக் குழுவினர் போராட்டம் நடத்தினர்.

இது ராணுவம் தொடர்பானது என்பதாலும், அதிரடியான போராட்டங்களை நடத்தக்கூடிய காவிரி உரிமை மீட்புக் குழுவினர் விமானப்படை தளத்தின் உள்ளே புகுந்துவிடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாகவும் இன்று அதிகாலையிலிருந்தே இப்பகுதியில் நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டார்கள்.

காவல்துறையினர் எதிர்பார்த்தது போலவே ஆயிரக்கணக்கில் திரண்டு வந்த போராட்டக்காரர்கள் பெரும் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் விமானப் படைத்தளத்தை நோக்கிச் செல்ல முயன்றார்கள். இதனால் இப்பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்தது.

காவிரி இல்லாமல் நம் வாழ்வில்லை... போர்க்களம் காணாமல் காவிரி இல்லை. கெஞ்சிக் கேட்டால் கிடைக்காது... கிளர்ச்சிக்கு பயந்தால் நடக்காது. கர்நாடகச் சிறையில் காவிரித்தாய்... கதவை உடைத்து விடுதலை செய்வோம். வஞ்சிக்காதே வஞ்சிக்காதே தமிழர்களை வஞ்சிக்காதே என ஆயிரக்கணக்கானவர்கள் ஒருமித்த குரலில் ஆவேச முழக்கமிட்டதால் இப்பகுதியில் உணர்ச்சிப் பெருக்கெடுத்து காணப்பட்டது.

இப்போராட்டம் குறித்துப் பேசிய காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவருமான பெ.மணியரசன் `மத்திய அரசு காவிரி பிரச்னையில் தமிழ்நாட்டுக்குத் தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து வருகிறது. இது அநீதி. சட்ட விரோதம். இதனால் தமிழ்நாட்டு மக்கள் பெரும் கொந்தளிப்பிலும் மன வேதனையிலும் இருக்கும் நிலையில், கொஞ்சம் அச்சமில்லாமல் காவிரி டெல்டா மாவட்டங்களுக்குத் துணை ராணுவப் படையை அனுப்பி தமிழர்களின் தன்மானத்திற்கும் இறையாண்மைக்கும் மத்திய அரசு குந்தகம் விளைவிக்கிறது. இதை நாங்கள் வேடிக்கை  பார்த்துக்கொண்டிருக்கமாட்டோம். காவிரி உரிமையை மீட்கவும், தமிழ்நாட்டின் தன்மானத்தைக் காக்கவும் எத்தகைய தியாகத்துக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.” என்றார்.