வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (12/05/2018)

கடைசி தொடர்பு:18:30 (12/05/2018)

ராமேஸ்வரம் அருகே விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிய அமைச்சர் மணிகண்டன்

 ராமேஸ்வரம் அருகே நடந்த கார் மற்றும் சுற்றுலா வேன் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் காயமடைந்தவர்களை அந்த வழியாக வந்த அமைச்சர் மணிகண்டன் தனது வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி உதவினார்.

 ராமேஸ்வரம் அருகே நடந்த கார் மற்றும் சுற்றுலா வேன் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் காயமடைந்தவர்களை அந்த வழியாக வந்த அமைச்சர் மணிகண்டன் தனது வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி உதவினார்.

விபத்தில் சிக்கியவர்களை மீட்ட அமைச்சர் மணிகண்டன்

சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியைச் சேர்ந்த 16 பேர் ராமேஸ்வரத்திற்கு இன்று காலை சுற்றுலா வந்தனர். ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு கல்லலுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். ராமேஸ்வரத்தை அடுத்த தண்ணீர் ஊற்றுப் பகுதியில் உள்ள ஏகாந்தராமர் சுவாமி கோயில் அருகே இவர்களது வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது வாலிநோக்கத்திலிருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்த இண்டிகா கார் வேனின் மீது அசுர வேகத்தில் மோதியது. மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் தடம் மாறி சாலை அருகே உள்ள பள்ளத்தில் இறங்கியது. இதில் கார் மற்றும் வேனில் பயணம் செய்த 11 பேர் பலத்த காயமடைந்தனர்.
 

விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி அமைச்சர் மணிகண்டன்
 

அப்பகுதியில் வாகனத்தில் சென்றவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டுக்கொண்டிருந்த போது அந்த வழியாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் ராமேஸ்வரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். விபத்து நடந்த பகுதிக்கு வந்த அமைச்சர் மணிகண்டன் விபத்தில் காயமடைந்தவர்களை தனது வாகனம் மற்றும் போலீஸ் பாதுகாப்பு வாகனம் ஆகியவற்றில் ஏற்றி சிகிச்சைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதனை தொடர்ந்து  மாவட்ட ஆட்சியர் நடராஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா ஆகியோரும் விபத்து நடந்த இடத்துக்கு வந்தனர்.

இந்நிலையில் ராமேஸ்வரம் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் வாலிநோக்கத்தைச் சேர்ந்த நசீதா பேகம் (50) என்பவர் இறந்து போனார். மற்றவர்களுக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் பலத்த காயமடைந்த இருவர் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ராமேஸ்வரம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்கள் ராமநாதபுரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் மருத்துவமனைக்கு வந்த அமைச்சர் மணிகண்டன், மாவட்ட ஆட்சியர் நடராஜன் ஆகியோர் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோரைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.