மன்னார்குடி வங்கிக் கொள்ளை! ஊழியர் உள்பட 4 பேர் துப்பாக்கிகளுடன் கைது

மன்னார்குடியில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் துப்பாக்கி முனையில் நடந்த கொள்ளை தொடர்பாக வங்கி ஊழியர் உள்பட 4 பேரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட வங்கிக் கொள்ளையர்கள்

திருவாருர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் கடந்த 7-ம் தேதி நுழைந்த மர்ம நபர்கள், துப்பாக்கி முனையில் ரூ.5.58 லட்சம் பணம் மற்றும் 84 கிராம் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். மேலும், வங்கியில் இருந்த கண்காணிப்பு கேமிரா மற்றும் அவற்றைப் பதிவு செய்யும் இயந்திரங்கள் உள்ளிட்டவற்றையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றனர். 

இதுதொடர்பாக வங்கி மேலாளர் மற்றும் வங்கி ஊழியர்களிடம் காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தினர். கொள்ளை தொடர்பாக 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீஸார் புலன் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையின்போது, மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் உள்ள வீடியோ பதிவுகளை ஆராய்ந்து, அவற்றில் கிடைத்த தடயங்களை வைத்து கொள்ளையர்கள் வெள்ளை நிற காரில் வந்ததை போலீஸார் உறுதி செய்தனர்.

கொள்ளையர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருள்கள்

இதன் அடிப்படையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதலை தீவிரப்படுத்தியபோது, திருச்சி மாவட்டம் மணப்பாறை தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் கடைநிலை ஊழியராக பணிபுரியும் தூத்துக்குடியை சேர்ந்த மரியசெல்வம்,ஓட்டுநர் முத்துகுமார், மீரா மைதீன்,சுடலைமணி ஆகியோர் கூட்டு சதியில் ஈடுபட்டு வங்கியில் கொள்ளையடித்து தெரியவந்தது. இதையடுத்து அவர்களைக் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 2 துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிககளில் ஒன்று, ஒரிஜினல் என்றும் மற்றொன்று டூப்ளிகேட் எனவும் தெரியவந்துள்ளது. கொள்ளையடித்த ரூ.5.58 லட்சத்தில், ரூ.2.58 லட்சம் ரூபாய் பணமும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. அதேநேரம், நகைகள் குறித்து போலீஸார் விசாரண நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரைத் தேடிவருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!