”காவிரிக்காக மத்திய அரசு அலுவலகங்களைச் செயல்பட விடாமல் முடக்குவோம்” பெ.மணியரசன் எச்சரிக்கை

மத்திய அரசை கண்டித்து விமானப்படை தளத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த சென்ற காவிரி உரிமை மீட்பு குழுவை சேர்ந்தவர்களை காலவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது...

மத்திய அரசைக் கண்டித்து  விமானப்படை தளத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தச் சென்ற  காவிரி உரிமை மீட்புக் குழுவை சேர்ந்தவர்களை காலவல்துறையினர் தடுத்து நிறுத்தியதாலும், பிரதமர் மோடி மற்றும் தீபக் மிஸ்ரா போட்டோ  கொளுத்தப்பட்டதாலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காவிரி போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காவிரி உரிமை மீட்புக் குழுவை சேர்ந்தவர்கள் சில தினங்களுக்கு முன் தஞ்சாவூர் விமானப்படை தளத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர்.

அதன்படி தஞ்சாவூர் மேலவஸ்தாசாவடியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பேரணியாக விமானபடைதளத்தை முற்றுகையிடச் சென்றனர். இதற்கு முன்னதாக தீயணைப்பு துறை, வஜ்ரா உள்ளிட்ட நவீன ரக வாகனங்களோடு அந்த  இடத்தில் பெரும் அளவில் போலீஸ் படை குவிக்கப்பட்டிருந்தது. போலீசார் பேரணியாக வந்தவர்களைக் கொஞ்ச தூரத்திலேயே மறைத்து கைது செய்ய முயன்றனர்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர்கள் அப்படியே சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரன், ”இன்று நாம் விமானப் படை தளத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த ஏன் சென்றோம் என்றால்  நாம் தமிழகத்திற்கு காவிரியைக் கேட்டு கொண்டிருக்கிறோம். மோடி அரசு ராணுவப்படையை அனுப்பி போராட்டம் நடத்துபவர்களை எந்த எந்த ஊரில் எப்படித் தாக்குவது, அந்த ஊர்களுக்கு எப்படித் செல்வது எனத் திட்டமிட்டு ஆராய்ந்தனர். அதனால் தான் நாம் விமானப்படை தளத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி நம் எதிர்ப்பைப் பதிவு செய்யச் சென்றோம்.

காவிரி போராட்டம்

ஆனால் காவல் துறையினர்  நம்மை வழி மறித்து அனுமதி மறுக்கிறார்கள். விமானப் படைத்தளத்திற்கு ஒரு கிலோ மீட்டருக்கு முன்னதாகவே தடுத்து நிறுத்துவதற்கு என்ன அவசியம். 2009 -ம் ஆண்டு  ஈழத்தில் நம் தமிழினம் அழிக்கப்பட்டு கொண்டிருந்த போது நாம் காவிரி போராட்டம்இதே போல் இதே விமானப்படை தளத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம். அப்போது ஏதாவது அசம்பாவிதம் நடந்ததா அமைதியான முறையில் தானே  நாங்கள் போராட்டம் நடத்தினோம்.

ஆனால் இப்போது எங்களைப் பாதியிலேயே  நிறுத்துவதற்கு யார் உத்தரவு கொடுத்தார்கள். காவல்துறை உயர் அதிகாரிகளா? இல்லை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியா? இப்படி நடப்பது முதல்வருக்குத் தெரியுமா இல்லை காவல்துறையை சேர்ந்தவர்களே அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்கிறார்களா. குளு குளு அறையில் இருந்து கொண்டு நாங்கள் உத்தரவுகளைப் பிறபிக்க வில்லை. உரிமைகளைப் பெறுவதற்கும் அவற்றை இழக்காமல் இருப்பதற்கும் வீதியில் இறங்கிப் போராடி கொண்டிருக்கிறோம்.

காவிரி போராட்டத்தை இப்படி அடக்குவதன் மூலம் முதல்வர் எடப்பாடி அரசிற்குத்தான் கெட்ட பெயர். இப்படி போராட்டங்களை அடக்குவதன் மூலம் நாங்கள் ஓய்ந்துவிடப் போவதில்லை. இதனால் போராட்டம் வேறு வடிவங்கள் எடுக்கும். வீச்சு பெறும். மேலும் மத்திய அரசு அலுவலகங்களை, நிறுவனங்களைச் செயல்பட விடாமல் முடக்குவோம் என எச்சரிக்கை செய்கிறோம்” என்றார். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது பிரதமர் மோடி, தீபக் மிஸ்ரா, ராகுல் காந்தி பாம்புகளை போல் இருக்கும் புகைப்படத்துடன் தமிழகத்தை வஞ்சிக்கும் கரு நாகங்கள் என அச்சடிக்கப்பட்ட பிளக்ஸை கொளுத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!