Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பள்ளிக் குழந்தைகளுக்கு குறைந்த விலையில் கரும்பு ஜுஸ் -அசத்தும் பொய்யாமொழி

நாகை மாவட்டம், மயிலாடுதுறை மகாதானத் தெருவில் தேசிய மேல்நிலைப் பள்ளிக்கு எதிரில் கையால் பிழியும் கரும்பு ஜுஸ் கடை வைத்திருக்கிறார் பொய்யாமொழி.  55 வயதான பொய்யாமொழி, கடந்த 12 ஆண்டுகளாக சீசன் நேரத்தில் மட்டுமல்லாமல் ஆண்டு முழுவதும் அதே இடத்தில் கடை நடத்தி வருகிறார்.  ஊரெங்கும் கரும்பு ஜுஸ் ரூ.20க்கு மேல் விற்கப்படுகிற சூழ்நிலையில், பொய்யாமொழி மட்டும் ஒரு கிளாஸ் கரும்பு ஜுஸ் ரூ.10க்கு விற்பனைச் செய்கிறார்.  அதிலும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என்றால் ஒரு கிளாஸ் கரும்பு ஜுஸ் ரூ.5க்கு தருகிறார்.  இதனால் இவர் கடையில் கூட்டம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது.  முகம் சுளிக்காமல் பள்ளிக் குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுத்தும், மற்றவர்களுக்கும் சளைக்காமல் விற்பனை செய்து கொண்டே இருக்கிறார்.

கரும்பு ஜுஸ் 

இதுபற்றி பொய்யாமொழியிடம் பேசியபோது,  "அய்யா அப்துல்கலாம், 'பள்ளிக் குழந்தைகளை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் ஊக்குவிக்க வேண்டும்.  அப்போதுதான் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறி உயர்ந்த இடத்தை அடைவார்கள்.  நன்றி மறக்காமல் நாமும் அவர்களைப் போல் வாழ வேண்டும் என்றும், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்  என்ற எண்ணம் ஏற்படும்' என்று கூறினார். அதனால் தான் பள்ளிக் குழந்தைகளுக்கு நம்மால் ஆன உதவியை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் குறைந்த விலையில் கரும்புஜுஸ் கொடுக்கிறேன்"  என்றார்.   

இவ்வளவு குறைந்த விலையில் விற்பனைச் செய்யும்போது உங்களுக்கு நஷ்டம் ஏற்படாதா? என்று கேட்டபோது,  "திருவையாறு பகுதியிலிருந்துதான் எங்களுக்குக்  கரும்பு வருகிறது.  ஒரு டன் கரும்பு விலை ரூ.5 ஆயிரம்.  ரூ.5, ரூ.10க்கு விற்பனைச் செய்தாலும், அதிலிருந்து ரூ.10 ஆயிரம் சம்பாதிக்க முடியும்.  எனக்கென தினசரி நூறு வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.  எனது சொந்த ஊர் வடகரை அருகே அன்னவாசல் என்றாலும், தற்போது மயிலாடுதுறையில் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறேன்.  திருமணமாகி எங்களுக்குக்  குழந்தையில்லை.  என்றாலும், ஏழைக் குடும்பத்திலிருந்து ஒரு பெண் குழந்தையைத்  தத்தெடுத்து, அவளை வளர்த்து ஆளாக்கி நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளோம்.  இதனாலும் குழந்தைகள் மேல் எனக்கு அளப்பரிய பிரியம்.  இங்கு வரும் குழந்தைகளை என் குழந்தைகளைப் போலவே பாவிக்கிறேன்.  அந்த மனநிறைவோடுதான் ஆண்டு முழுவதும் இந்தத் தொழிலைச் செய்து வருகிறேன்" என்று முடித்தார்.  

இப்படியும் சில நல்ல மனிதர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்! 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement