”ராமேஸ்வரம் கோயிலில் தீர்த்தமாட அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை” அமைச்சர் எச்சரிக்கை

  ராமேஸ்வரம் தீவில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் ரூ.31 கோடி அளவிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் மணிகண்டன் இன்று ராமேஸ்வரத்தில் தெரிவித்தார்.

ராமேஸ்வரம் தீவில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் ரூ.31 கோடி அளவிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் மணிகண்டன் நேற்று ராமேஸ்வரத்தில் தெரிவித்தார்.

ராமேஸ்வரம் சாலையோர கடையில் ஆய்வு செய்த அமைச்சர்


  தமிழகத்தில் பாதுகாப்பான முறையில் உணவுப் பொருட்கள் விற்பனை மற்றும் உணவுப் பொருள் நுகர்வு குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் கூடும் இடங்களில் மே மாதம் முழுவதும் விழிப்பு உணர்வு முகாம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாமினை மாவட்ட ஆட்சியர் நடராஜன் தலைமையில் அமைச்சர் மணிகண்டன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பொதுமக்களுக்கு  பாதுகாப்பான உணவுப் பொருட்களை வழங்குவது குறித்து உணவு வணிகர்களுக்கும், உணவு விடுதிகள் மற்றும் குளிர்பான நிலையங்களில் உணவுப் பொருட்களை வாங்கி உட்கொள்கையில் கவனிக்க வேண்டிய விசயங்கள் குறித்தும், உணவுப் பொருட்கள் குறித்த புகாரினை தெரிவிக்க மாவட்ட அளவில் தனி வாட்ஸ்அப் எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டது.
 
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மணிகண்டன் ''நாடு முழுவதிலும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் ராமேஸ்வரம் வந்து செல்கின்றனர். இவர்கள் வசதிக்காகவும், சுற்றுலாவை மேம்படுத்தும் வகையிலும் மத்திய அரசின் திட்டமான 'சுவதேஷ் தர்ஷன்' திட்டத்தின் கீழ் ராமேஸ்வரம் நகராட்சியில் 15.86 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. வாகன நிறுத்துமிடம், வணிக வளாகம், நவீன கழிப்பறைகள், எல்.இ.டி தெரு விளக்குகள், உடை மாற்றும் அறை, ஒளிரும் தகவல் பலகைகள் ஆகியன அமைக்கப்பட உள்ளன. இதே போல் புயலால் அழிந்து போன பிரதான சின்னங்களைப் பாதுகாக்கும் வகையில் புனரமைப்பு பணிகளுக்கு  ரூ.4.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதே போல் குந்துகால் பகுதியில் ரூ 4.5 கோடி செலவில் ஒலி-ஒளி காட்சி கூடம் அமைக்கப்பட உள்ளது. அங்கிருந்து பாம்பனுக்கு பைபாஸ் சாலையும் அமைய உள்ளது. 

ராமேஸ்வரம் கோயிலில் தீர்த்தமாட வரும் பக்தர்களிடம் கோயில் நிர்வாகம் நிர்ணயித்த கட்டணத்தினை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகப் புகார் வருகிறது. தீர்த்தம் ஊற்றும் பணியாளர்கள் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள். எனவே நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும்'' என்றார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, உணவுப் பாதுகாப்பு மற்றும் நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ், மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!