வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (13/05/2018)

கடைசி தொடர்பு:05:30 (13/05/2018)

"ஆளப்போற தமிழனே.." கொண்டாட்டத்துக்குத் தயாராகும் விஜய் ரசிகர்கள்...!

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, கோவையில் அவரது ரசிகர்கள், அரசியல் குறியீட்டுடன் சுவர் வாசகங்களை எழுதியுள்ளனர்.

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, கோவையில் அவரது ரசிகர்கள், அரசியல் குறியீட்டுடன் சுவர் வாசகங்களை எழுதியுள்ளனர்.

விஜய் ரசிகர்கள்

ரஜினி மற்றும் கமல் அரசியல் பிரவேசம் செய்துள்ள நிலையில், நடிகர் விஜய்யும் விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகப் பேச்சுகள் எழுந்துள்ளன. குறிப்பாக, அண்மையில் மதுரையில் அவரது ரசிகர்கள் சிலர், அரசியல் பிரவேசம் தொடர்பாக போஸ்டர்களை ஒட்டிப் பரபரப்பை கிளப்பினர்.

இதனிடையே, தனது மக்கள் இயக்கத்தின் பணிகளை விஜய் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகர் விஜய்யின் பிறந்தநாள் அடுத்த மாதம் 22-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, வழக்கம் போல அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

பொதுவாக விஜய் பிறந்தநாளில், அன்னதானம் செய்வது, ரத்த தானம் செய்வது, மாணவர்களுக்கு நோட், புத்தகங்களை வழங்குவது போன்ற செயல்களில்தான் விஜய் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், இம்முறை விஜய் ரசிகர்களின் கொண்டாட்டத்தில் அரசியல் எட்டிப்பார்க்கிறது.

குறிப்பாக, விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, கோவையில் அவரது ரசிகர்கள் சுவர்களில் எழுதியுள்ள வாசகங்களில், அரசியல் வாடை சற்று தூக்கலாகவே இருக்கிறது. அதில், “நாளைய தமிழமே…”, ”மக்கள் இயக்க முதல்வரே” “ஆளப்போற தமிழனே…” போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.