வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (13/05/2018)

கடைசி தொடர்பு:15:34 (27/06/2018)

”10 பைசாவுக்கு குடிநீர்” இஸ்ரோவின் தொழில்நுட்பம் குறித்து முன்னாள் விஞ்ஞானி தகவல்!

ஒரு லிட்டர் குடிநீர் பத்து பைசாவுக்கு கொடுக்கும் வகையிலான தொழில் நுட்பம் இஸ்ரோவில் இருப்பதாக முன்னாள் விஞ்ஞானி என்.சிவசுப்பிரமணியன்  ராமநாதபுரத்தில் தெரிவித்தார்.

 ஒரு லிட்டர் குடிநீர் பத்து பைசாவுக்கு கொடுக்கும் வகையிலான தொழில் நுட்பம் இஸ்ரோவில் இருப்பதாக இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி என்.சிவசுப்பிரமணியன்  ராமநாதபுரத்தில் தெரிவித்தார்.

குடிநீர் தொழில்நுட்பம் குறித்து உரையாற்றிய விஞ்ஞானி சிவசுப்பிரமணியன்

 

ராமநாதபுரத்தில் மாணவர் அறிவியல் பேரவை சார்பில் நடைபெற்ற சமூக விழிப்பு உணர்வுக் கருத்தரங்கில் கலந்து கொண்ட இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி சிவசுப்பிரமணியன் இது குறித்து கூறுகையில் ''குடிநீர் பற்றைக்குறையை முழுமையாகப் போக்கும் வகையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை இஸ்ரோ கண்டு பிடித்துள்ளது. குறைந்த முதலீட்டில் இத்திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்த முடியும். முதலீட்டில் பாதித் தொகையை அரசும், மீத பாதித் தொகையை தொண்டு நிறுவனங்களும் செய்தால் இத்திட்டத்தை மிகச் சிறப்பாக செயல்படுத்த முடியும். முதலீடு செய்ய தொழிலதிபர்கள் பலரும் தயார் நிலையிலும் உள்ளனர். கடல் நீரிலிருந்து 5 லட்சம் மில்லியன் லிட்டர் குடிநீர் தினசரி உற்பத்தி செய்ய முடியும். ஒரு லிட்டர் குடிநீர் 10 பைசாவுக்கு விற்பனை செய்யலாம். இத்திட்டத்தின் மூலம் குடிநீர் பற்றாக்குறையை முழுமையாக போக்கிவிட முடியும்.

மீனவர்களுக்குக் கடலில் எந்த இடத்தில் மீன்வளம் அதிகமாக இருக்கிறது என்பதைக் கண்டறியும் தொழில் நுட்பமும், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது மீனவர்கள் அவர்களுக்கே தெரியாமல் எல்லை தாண்டும் போது ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்யும் கருவிக்கான தொழில் நுட்பத்தையும் இஸ்ரோ கண்டு பிடித்துள்ளது. கடலில் எந்த இடத்தில் மீன்வளம் அதிகமாக இருக்கிறது என்பதை முன்கூடியே செயற்கைக் கோள் மூலம் தெரிந்து கொண்டு அந்த இடத்திற்கு மீனவர்கள் சென்று கடலில் மீன்பிடிக்கலாம். எல்லை தாண்டும் போது மீனவர்களுக்கு ஒலி எழுப்பி எச்சரிக்கை தரக்கூடிய கருவியை தற்போது கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு வழங்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கும் இக்கருவியைத் தயாரித்து வழங்கலாம்.

நியூட்ரினோ ஆய்வு மையம் தமிழகத்தில் தேனியில் அமைக்கப்பட இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்த ஆய்வு மையம் முதலில் அமெரிக்காவிலும், பின்னர் ரஷ்யாவிலும், 3 வதாக ஜப்பானிலும் அமைந்துள்ளது. இந்த ஆய்வு மையம் நான்காவதாக இந்தியாவில் தமிழகத்தில் அமைந்தால் சர்வதேச அளவில் அறிவியல் திறனை வளர்க்கும் மையமாக அமையும். இம்மையத்தால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதைத் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தி மையம் அமையத் துணை நிற்க வேண்டும். இம்மையத்தின் மூலம் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்றால் அதை நாங்களும் எதிர்ப்போம். ஆனால் சர்வதேச அளவில் அறிவியல் ஆராய்ச்சி மையம் அமையத் பலரும் எதிர்ப்பது வியப்பாக இருக்கிறது.

கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்கவும், மகேந்திரகிரியில் விண்வெளி ஆராய்ச்சி மையம் தொடங்கிய போதும் எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் இன்று கூடங்குளம் அணு மின் நிலையத்தால் தமிழகத்தில் மின்தடையே ஏற்படாமல் இருக்கிறது. அதே போல மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அருகில் பல கல்வி நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இரண்டும் இந்தியாவின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. விஞ்ஞானத்தை சமூக முன்னேற்றத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாணவர்களை அறிவியல் பாடத்தில் மதிப்பெண்கள் அதிகம் பெறுவதற்காக மட்டுமே படிக்காமல் புதிய, புதிய கண்டுபிடிப்புகளை மாணவர்கள் கண்டு பிடிக்க வேண்டும் என்பதற்காகவும் மாணவர் அறிவியல் பேரவையை முதல் முதலில் ராமநாதபுரத்தில் துவக்கி இளம் விஞ்ஞானிகள் பலரை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன்' எனத்' தெரிவித்தார். பேட்டியின் போது மாணவர் அறிவியல் பேரவையின் நிறுவனர் எம்.எஸ்.வாசனும் உடன் இருந்தார்.