உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் நடைபெற்ற சிறப்பு வழிபாடு! | Special worship for the goodness of world and for good rain

வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (13/05/2018)

கடைசி தொடர்பு:08:30 (13/05/2018)

உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் நடைபெற்ற சிறப்பு வழிபாடு!

மழை

உலக நன்மைக்காகவும், மழை பொழிய வேண்டியும் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் 14 கி.மீ மலையைச் சுற்றி தீர்த்தக்குடம் எடுத்த சுவாரஸ்யமான  விழா ஈரோட்டில் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் மலைமேல் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், நாடு செழித்து சகல நன்மைகள் பெற வேண்டியும் அக்னி நட்சத்திர விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதற்காகச்  சப்த நதிகள் என்று சொல்லப்படும் கங்கை, யமுனை, சரஸ்வதி, சிந்து, கிருஷ்ணா, கோதாவரி, தாமிரபரணி ஆகிய நதிகளுக்குச்  சென்று தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. மேலும், சுற்றுப்புறத்திலுள்ள சுமார் 50-ம் மேற்பட்ட கிராமக் கோவில் கிணறுகளில் இருந்தும் குடங்களில் தீர்த்தம் எடுத்து வந்தனர். 

இதனையடுத்து, நேற்று காலை சென்னிமலை மாரியம்மன் கோவிலில் இருந்து சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மேள, தாளம் முழங்க தீர்த்தக் குடங்களுடன் பல்வேறு ஊர்களின் வழியாக 14 கி.மீ தூரம் மலையைச் சுற்றி கிரிவலம் வந்தனர். அதனைத்தொடர்ந்து இன்று காலை சுப்பிரமணியசாமிக்கு சப்த நதி தீர்த்த அபிஷேகமும், மகா தீபாராதனை, உற்சவமூர்த்தி புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இதுகுறித்து அக்னி நட்சத்திர வழிபாட்டு மன்ற நிர்வாகி சுப்புசாமி அவர்களிடம் பேசினோம். “ஊர்மக்கள் அனைவரும் சேர்ந்து, எவ்வித பாகுபாடும் இல்லாமல் முருகனுக்கு அபிஷேகம் செய்தால் மழை பெய்யும் என்ற முன்னோர்களின் ஐதீகத்தால் இதனைத் தொடர்ந்து செய்து வருகிறோம். மக்களின் இந்த கூட்டுப் பிரார்த்தனையால் வருடாவருடம் சிறப்பாக மழை பொழிகிறது. இன்று கூட கடுமையான வெயில் இருந்தது, ஆனால், நாங்கள் தீர்த்தக் குடங்களை எடுத்துக்கொண்டு கோவிலை நெருங்கும் வேளையில் திடீரென மழை பெய்து, மக்களின் வேண்டுதலை நிறைவேற்றியது” என்றார்.