வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/05/2018)

கடைசி தொடர்பு:06:00 (13/05/2018)

குழந்தைகளுடன் விளையாடிய 7 வயது சிறுமி மர்ம மரணம்; ஈரோட்டில் நடந்த சோகம்!

மரணம்

 

குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுகா, கருமாண்டிசெல்லிபாளையம் அங்கப்பா வீதியைச் சேர்ந்தவர்கள் சண்முகநாதன் - கனகா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு வினோ (9), கனிஷ்கா (7) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சண்முகநாதன் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் ஏற்றுமதி நிறுவனத்திலும், கனகா திங்களூரில் உள்ள ஒரு தனியார் ஏற்றுமதி நிறுவனத்திலும் வேலை செய்து வருகின்றனர். வழக்கம்போல தம்பதியர் இருவரும் நேற்று (மே-12) காலை வேலைக்குச் சென்றிருக்கின்றனர். பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், குழந்தைகள் இருவரும் பக்கத்து வீடுகளில் வசிக்கும் குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டு இருந்திருக்கின்றனர்.

இந்தநிலையில், நேற்று காலை 10 மணியளவில் கருமாண்டிச்செல்லிபாளையம் மாரியம்மன் கோவில் அருகே உள்ள ஒரு மரத்தடியில் சிறுமி கனிஷ்கா மயங்கிய நிலையில் கிடந்திருக்கிறாள். அப்பகுதியைச் சேர்ந்த முறுக்கு வியாபாரியான மாயப்பன் என்பவர் இதனைப் பார்த்து பதறியடித்து, சிறுமியின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து சிறுமி கனிஷ்காவை பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்க, சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். குழந்தை இறந்துவிட்டது என்ற தகவலைக் கேட்டதும், பெற்றோர்கள் மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்கச் செய்தது.

விளையாடும் பொழுது கனிஷ்காவுக்கு கீழே விழுந்து அடிபட்டது என கனிஷ்காவுடன் விளையாடிய குழந்தைகள் கூறியுள்ளனர். ஆனால், சிறுமியின் கழுத்து, உதடு, மூக்கு உள்ளிட்ட பகுதிகளில் நகத்தினால் கீறப்பட்டது போன்ற ரத்தக்காயம் இருந்திருக்கிறது. எனவே, சிறுமி கீழே விழுந்து அடிபட்டு இறந்தாளா?... அல்லது மர்ம நபர்கள் யாரேனும் சிறுமியைக் கொலை செய்தனரா? என்பது உள்ளிட்ட பல கோணங்களில் பெருந்துறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் தான் குழந்தை எவ்வாறு இறந்தது எனத் தெரியவரும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.