வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (13/05/2018)

கடைசி தொடர்பு:09:30 (13/05/2018)

“வானத்தில் இருக்கும் வெற்றிடத்தை மட்டுமே ரஜினியால் நிரப்ப முடியும்” - ஓ.எஸ்.மணியன் பேட்டி!

நாகை மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தமிழக அரசியல் பற்றி கூறும் போது, "தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை. வானத்தில் 36 ஆயிரம் கி.மீ -க்கு மேலே தான் வெற்றிடம் உள்ளது" எனக் கூறியுள்ளார்.

நாகை மாவட்டம், சீர்காழிக்கு அருகே உள்ள பெருந்தோட்டம், திருவாலி ஆகிய கிராமங்களில் பொதுப்பணித்துறை சார்பாக நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்ட ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "நாகை மாவட்டத்தில் ரூ.1,650 கோடி செலவில் கடல் நீர் உட்புகுவதைத் தடுக்கவும், தூய நீரைச் சேமிக்கவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தடுப்பணைகள் கட்ட ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அந்தப் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன” என்றார். 

இந்தப் பேட்டியின் போது, பத்திரிகையாளர்களைத் தரம் தாழ்ந்து விமர்சித்த நடிகர் எஸ்.வி. சேகர் கைது செய்யப்படாதது குறித்து நிரூபர்கள் கேட்ட போது, "அவர் இருக்கும் இடத்தைக் கூறினால் போலீஸார் இப்போதே கைது செய்து விடுவார்கள்" என்றார்.

மேலும் தரங்கம்பாடியில் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களை சந்தித்த போது, " தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை. வானத்தில் 36 ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேலே தான் வெற்றிடம் உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அங்கே போனால் வெற்றிடத்தை நிரப்பலாம்" என்று கூறினார்.