ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்

தூத்துக்குடி  மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக் கணக்கான  பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

ஸ்ரீவைகுண்டம்


தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் ஊரைச் சுற்றிலும் உள்ள 9 பெருமாள் திருத்தலங்கள் நவதிருப்பதிகள் என அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் விரத நாட்களில் இந்தக் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். இந்த நவ திருப்பதிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்திற்கும் உகந்த சிறப்பு பெற்ற தலங்கள் ஆகும். இதில் முதலாவது தலம் தான் ஸ்ரீவைகுண்டம், கள்ளபிரான் திருக்கோயில்.

இக்கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழா நாட்களில், சுவாமி கள்ளபிரான் தினமும் காலை தங்க தோளுக்கினியான் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா புறப்பாடு,  தங்க மசரகிரியில் கண்ணாடி மண்டபத்தில் வைத்து திருமஞ்சனம், தீர்த்த விநியோகம் ஆகியவை நடைபெற்று வருகிறது. 

மாலையில் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில்  கள்ளபிரான் சுவாமி  வீதியுலா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட வைபவம் இன்று நடைபெற்றது.  இதை முன்னிட்டு, சுவாமி கள்ளபிரான் காலை  7 மணிக்கு தேரில் எழுந்தருளினார்.  8.30 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்தலும் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் "கோவிந்தா... கோபாலா...", "ஹரே ராமா.. ஹரே கிருஷ்ணா.." கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து நிலையத்தை அடைந்தது தேர். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!