வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (13/05/2018)

கடைசி தொடர்பு:15:30 (13/05/2018)

`ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தகுதி உச்ச நீதிமன்றத்திற்கே உள்ளது’ - தமிழிசை தகவல்

"ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூடிய தகுதி மத்திய, மாநில அரசுகளிடம் இல்லை, உச்ச நீதிமன்றத்திற்குதான் உள்ளது" என பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழசை தெரிவித்துள்ளார். 

தமிழிசை

தூத்துக்குடி மாவட்டம்  ஊத்துப்பட்டியில்  சங்கரபாண்டிய சுவாமிகள் சமாதுவில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் தமிழிசை, கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.  இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  "கர்நாடாகவில் பா.ஜ.க வெற்றி பெறும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. மக்களின் கருத்துக்களும் அப்படித்தான் உள்ளது. அங்கு பா.ஜ.க., நிச்சயம் வெற்றி பெறும். 

கர்நாடகவில் பா.ஜ.க ஆட்சிக்கு வருவதால் தமிழகத்திற்கு உறுதுணையாகவும் பக்கபலமாகவும் இருக்கும். நெடுங்காலமாகத் தீர்க்கப்படாத காவிரி மேலாண்மை வாரியப் பிரச்னை தீரும். கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த கர்நாடாக காங்கிரஸ், தமிழகத்திற்கு எந்த உதவியையும் செய்யவில்லை. இன்று மத்திய அரசைப் பார்த்து கேள்வி கேட்பவர்கள் உச்ச நீதிமன்றம் தமிழகத்திற்கு 4 டி.எம்.சி தண்ணீர் தர உத்தரவிட்ட போது ஏன் யாரும் கேள்வி கேட்கவில்லை?. 23 மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியில் உள்ளது. தமிழகத்தில் தேசிய கட்சி ஒன்று ஆட்சிக்கு வருகிறது என்றால் அது பா.ஜ.கவாக மட்டும் தான் இருக்க முடியும். காங்கிஸ் கட்சிக்கு அதற்கான வாய்ப்பே இல்லை. 

குஜராத்,மகாராஷ்டிரா மாநிலங்களில் விரட்டி அடிக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு, அப்போதைய மத்திய காங்கிரஸ் ஆட்சிதான் அனுமதி கொடுத்தது. தமிழகத்திலும் இங்குள்ள அ.தி.மு.க அரசு அனுமதி வழங்கியது.  அதையடுத்து, கடந்த 2005-ம் ஆண்டில் தி.மு.கவைச் சேர்ந்த அப்போதைய மத்தியச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆ.ராசாதான் மத்திய அரசின்  சுற்றுச்சூழல் துறை அனுமதியை ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கினார். 2013-ம் ஆண்டில் அந்த ஆலையில் சில உயிரிழப்புகள் ஏற்பட்டவுடன், அப்போது இருந்த அ.தி.மு.க. அரசு ஆலையை மூட வேண்டும் என்று சொன்னவுடன், அந்த நிர்வாகம் உச்ச நீதிமன்றம் சென்றது. ரூ.100 கோடி அபராதத் தொகையுடன் மீண்டும்  திறக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூடிய தகுதி மாநிலத்தில் ஆளும் அ.தி.மு.க. அரசிற்கோ, மத்தியில் ஆளும்  பா.ஜ.க அரசிற்கோ இல்லை, உச்ச நீதிமன்றத்திற்கு மட்டும்தான் உள்ளது. நாங்கள் எந்த விதத்திலும் இதில், சம்பந்தப்படவில்லை, ஆலைக்கு அனுமதி கொடுக்கவில்லை, விரிவாக்கம் செய்ய நாங்கள் சொல்லவில்லை, சுற்றுச்சூழல் அனுமதி கொடுத்தது நாங்கள் இல்லை, தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ் இந்தக் கட்சிகள்தான் சம்பந்தப்பட்டுள்ளன. ஒரு துளியளவு கூட சம்பந்தப்படாதது பா.ஜ.க., இதை அந்த ஸ்டெர்லைட் நிறுவனத்துடன் எப்படி இணைத்துப் பேசி வருகிறார்கள்?. இது கண்டிக்கத்தக்கது" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க