`பா.ஜ.கவுடன் கூட்டணி?’ - இளைஞரணி நிர்வாகிகளிடம் ரஜினி ஆலோசனை

நடிகர் ரஜினிகாந்த் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துக்கொள்வது தொடர்பாக தனது மக்கள் மன்றத்தின் இளைஞரணி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தியுள்ளார்.

ரஜினி

ரஜினிகாந்த் இன்று தனது மக்கள் மன்றத்தின் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகளை நேரில் சந்திப்பதற்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி இன்று காலை சுமார் 30-க்கும் மேற்பட்டவர்கள் கோடம்பாக்கத்தில் உள்ள  ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு வந்திருந்தனர். வந்தவர்களிடம் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட பிறகு, அனைவரையும் வேனில் ஏற்றிக் கொண்டு நேராக போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவரது வீட்டில் இளைஞரணி நிர்வாகிகளிடம் ரஜினி பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆலோசனை முடிந்து வெளியில் வந்த நிர்வாகிகள் நம்மிடம் பேசுகையில் “பி.ஜே.பியுடன் கூட்டணி வேண்டாம். அதனால் சிறுபான்மையினரின் ஓட்டுகளை நாம் இழக்க வேண்டி வரும். மன்றத்தின் நிர்வாகிகளுக்கும், இளைஞரணி நிர்வாகிகளுக்கும் கருத்து வேறுபாடு உள்ளதாகச் செய்திகள் வருகிறது. எந்த பிரச்னையும் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து செயல்பட வேண்டும். 35 ஆண்டுகள் 6 மாதம் வயதுடைய ஒருவர் மட்டுமே ரஜினி மக்கள் மன்றத்தின் இளைஞரணியில் உறுப்பினராக இருக்க முடியும். மாணவர்கள், மக்கள் மன்றத்தில் இணைய வேண்டும் எனக் கேட்கிறார்களே என்று நாங்கள் தலைவரிடம் கேட்டோம். அதற்குப் பதிலளித்த ரஜினி, `மாணவர்களை உறுப்பினராக இணையுங்கள். ஆனால் களப் பணியில் ஈடுபடுத்தாதீர்கள். அவர்களின் படிப்பு வீணாக போய்விடக்கூடாது’ என்றார். இந்தக் கூட்டத்தில், ரஜினி மக்கள் மன்றத்தின் இளைஞரணிக்கு மாநில நிர்வாகிகளை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.  மக்கள் மன்றம் என்பது வேறு; கட்சி என்பது வேறு. மன்றத்தில் சிறப்பாகப் பணிபுரியும் நிர்வாகிகளையே, கட்சியையும் நிர்வகிக்க அனுமதிக்கப்படுவார்கள்’’ என்றனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!