வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (13/05/2018)

கடைசி தொடர்பு:17:30 (13/05/2018)

ஆறு மாதங்கள் நிலுவையில் இருந்த வழக்கறிஞர் முருகனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

மாவோயிஸ்ட் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முருகனுக்கு

மாவோயிஸ்ட் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முருகனுக்கு, அந்த வழக்கில் பிணை கிடைத்துள்ளது. அவர் மீது தருமபுரியில் பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கின் பிணை மனு, சென்னை உயர்நீதிமன்றத்தில் 6 மாதங்களாக நிலுவையில் இருந்த நிலையில், கடந்த 10 ஆம் தேதி தள்ளுபடியானது.

இதுகுறித்து தமிழ்நாடு குடியுரிமைப் பாதுகாப்பு நடுவத்தைச் சேர்ந்தவர்கள் கூறும்போது, ''வழக்கறிஞர் முருகனைக் கரூர் வழக்கில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி கைது செய்த கியூ பிரிவு காவல்துறை, திருச்சி சிறையில் அடைத்தது. தன்னை கைது செய்தது தவறு என்று முருகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்தார். அவ்வழக்கில் முருகனுக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்துவிடும் என்று நினைத்த கியூ பிரிவினர், அவர் மீது ஏழு மாதங்களுக்குப் பிறகு தருமபுரி வழக்கில் 28.07.2017-ம் தேதி திருச்சி சிறையில் வைத்து கைது செய்தனர். 

ஆறு மாதங்கள்

தருமபுரி வழக்கில் கியூ பிரிவினர் கூறிய  குற்றச்சாட்டு என்னவென்றால், முதல் குற்றவாளியான சீனிவாசனை, வழக்கறிஞர் முருகன், மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் 07.08.2016- ம் தேதி சந்தித்ததாகவும், முருகன், சீனிவாசனிடம் டிவிடி பிளேயர், டேப் ரெக்கார்டர், துண்டறிக்கை, புத்தகம் ஆகியவற்றை கொடுத்தார் என்பதே ஆகும். இதைத்தொடர்ந்து தருமபுரி வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி முருகன் தாக்கல் செய்த விடுவிப்பு மனு, தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்றுவரை அதற்கான தீர்ப்பு வழங்கப்படவில்லை.

அதோடு, தருமபுரி வழக்கில் ஜாமீன் கோரி முருகன் தாக்கல் செய்த பிணை மனு, கடந்த 6 மாதங்களாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. அம்மனு கடந்த 09.05.2018-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. முருகன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு, 'இவ்வழக்கின் முதல் குற்றவாளியான சீனிவாசனும், வழக்கறிஞர் முருகனும் மதுரை மாட்டுத்தாவணியில் சந்தித்ததாக அரசு தரப்பில் உருவாக்கப்பட்ட சாட்சிகளான ரமேஷ் மற்றும் சிவா ஆகிய இருவரும், போலீஸார் சொல்வதுபோல் எந்தவொரு சம்பவமும் நடைபெறவில்லை, வழக்கறிஞர் முருகனை யாரென்றே தெரியாது என்றும், அவர்கள் அனுப்பிய மனு (Retraction Memo) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் அரசு தரப்பில் முக்கிய வழக்கு என்று கூறி வந்த கரூர் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, வழக்கறிஞர் முருகனுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. ஆதலால் பொய் வழக்கான இவ்வழக்கிலும் பிணை வழங்க வேண்டும்' என்று பல்வேறு தீர்ப்புகளை உதாரணம் காட்டி  வாதிட்டார். கடைசியில் கடந்த 14 மாதங்களுக்கு மேலாக திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் முருகனின் பிணை மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்த உள்ளோம்'' என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க