வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (13/05/2018)

கடைசி தொடர்பு:22:00 (13/05/2018)

தேனி கலெக்டர் அலுவலக பொது மேலாளர் வீட்டில் ரூ.5 லட்சம், 25 பவுன் நகை கொள்ளை!

தேனி மாவட்டம் அன்னஞ்சி பகுதியில் வசித்துவரும் கலெக்டர் அலுவலக பொது மேலாளர் வீட்டில் ரூ.5 லட்சம் பணம் மற்றும் 22 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி கலெக்டர் அலுவலகம்

தேனி அருகே உள்ள அன்னஞ்சி என்.ஜி.ஓ. காலனியில் வசித்து வருபவர் ஜஸ்டின் சாந்தப்பா. இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிராஸ்தாராக (பொது மேலாளர்) பணிபுரிகின்றார். இவர் தனது மனைவியுடன், நாகர்கோவிலில் உள்ள உறவினர்கள் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். நாகர்கோவிலில் இருந்து இன்று திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு வீட்டினுள் சென்று பார்த்துள்ளார். அங்கே, பீரோ உடைக்கப்பட்டு உள்ளே வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் பணம் மற்றும் 25 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, கொள்ளைச் சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து அல்லிநகரம் காவல்துறையினர் மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையை துவங்கியுள்ளனர். தேனி மாவட்டத்தில் சமீப் காலமாக பல்வேறு இடங்களில் தொடர் கொள்ளை சம்பவம் நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுப்பிரிவின் மேலாளர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.