வெளியிடப்பட்ட நேரம்: 03:45 (14/05/2018)

கடைசி தொடர்பு:03:45 (14/05/2018)

`கரூர் மாவட்ட வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.75 கோடி ஒதுக்கீடு!' - அமைச்சர் தகவல்

`கரூர் மாவட்ட வளர்ச்சித் திட்ட பணிகளுக்காக ரூ.75 கோடி நிதியினை தமிழக முதலமைச்சர் ஒதுக்கி உள்ளார்' என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், ஆண்டான்கோவில் புதூரில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், 39 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில், அமைச்சர் பேசினார். அப்போது, "தமிழக அரசு அறிவித்துள்ள அனைத்துத் திட்டங்களிலும் தகுதி வாய்ந்த அனைவருக்கும் தேவையான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்றுக் கால்நடை கிளை மருந்தகம் துவங்கப்பட்டுள்ளது. அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தின் வளர்ச்சி திட்டத்திற்காக முதலமைச்சர் ரூ.75 கோடி நிதியினை வழங்கியுள்ளார். கரூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் 100 ஆண்டுகளுக்கு மேல் பட்டா இல்லாதவர்களுக்குத் தற்சமயம் பட்டா வழங்கப்பட்டு வருகிறது. அரசை நாடி மக்கள் செல்லாமல் மக்களை நாடி அரசு செல்ல வேண்டுமென்ற நோக்கத்திற்காக அம்மா திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. முதியோர் உதவித்தொகைக்காக மனு செய்துள்ளவர்களுக்கு அதைப் பெற்றுத்தருவதற்காக அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவர்களுக்கு உத்தரவு வழங்கப்படும்" என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், 26 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவுகளையும், உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு நிதியுதவியும், 9 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப்பட்டாக்களையும் அமைச்சர் வழங்கினார்.