‘அவருக்காக ஓட்டு கேக்காதீங்கன்னு சொன்னாங்க’ - பொங்கிய அமைச்சர் கருப்பண்ணன்...! | somebody's told me to Don't ask votes for senthilbalaji says minister karuppannan

வெளியிடப்பட்ட நேரம்: 01:32 (14/05/2018)

கடைசி தொடர்பு:07:57 (14/05/2018)

‘அவருக்காக ஓட்டு கேக்காதீங்கன்னு சொன்னாங்க’ - பொங்கிய அமைச்சர் கருப்பண்ணன்...!

அமைச்சர் கருப்பண்ணன்

ஈரோடு மாவட்டம், பவானியில் நடைபெற்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை சுற்றுச் சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் செய்திருந்தார்.

நிகழ்ச்சியின்போது சிறப்புரையாற்றிப் பேசிய அமைச்சர் கருப்பண்ணன், “தி.மு.க ஆட்சிக்காலத்தில் மின்சாரம் இல்லாமல் தமிழகமே இருளில் மூழ்கிக்கிடந்தது. ஆனால், இன்றைக்கு அ.தி.மு.க ஆட்சியில் கடந்த 7 ஆண்டுகளாக தமிழகத்தில் மின்வெட்டே இல்லாத அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். அத்திக்கடவு - அவினாசி திட்டத்தைப் பற்றி 50 வருடமாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அதற்கான நிதி முழுவதையும் மாநில அரசு தன்னுடைய நிதியில் இருந்து ஒதுக்கி வேலையை ஆரம்பித்துள்ளது. குடிநீர்ப் பிரச்னை, குடிமராமத்து, சிறப்பான கல்வி, மருத்துவம் என அனைத்திலும் இந்த அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட ஆட்சியை சரியில்லை என்றும், கலைக்க வேண்டுமென்றும் தி.மு.க-வின் செயல்படாத தலைவர் ஸ்டாலின் சொல்லி வருகிறார். நீங்கள் ஆட்சியை கலைக்க நினைத்தாலும், மக்கள் விடமாட்டார்கள். பொதுமக்களே எங்களை நேசித்து, இந்த ஆட்சி பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு நாங்கள் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறோம்” என்றார்.

தொடர்ந்து பேசியவர், “பவானி டவுன் பகுதிகளில் சாலை அமைப்பதற்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருந்தார்கள். ஏற்கெனவே, பவானியின் அனைத்துப் பகுதிகளிலும் சாலைவசதி சிறப்பாக செய்து முடிக்கப்பட்டிருந்ததால், அந்த ஒரு கோடி ரூபாயை திருப்பிக் கொடுத்துவிட்டோம். அந்த அளவுக்கு மக்களின் தேவைகளை முன்கூட்டியே அறிந்து இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தை போராட்டக் களமாக மாற்ற, ஒருசில தலைவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். அம்மா இருந்தபோது சுக வாழ்க்கை அனுபவித்தவர்கள், தற்போது அந்த வாழ்க்கை வேண்டுமென கட்சி ஆரம்பித்து பிரச்னை செய்து கொண்டிருக்கிறார்கள். 

அந்தக் கட்சியில் உள்ள செந்தில்பாலாஜி எம்.எல்.ஏவாக அண்ணன் எடப்பாடி தலைமையில் நாங்கள் தான் கடுமையாக உழைத்தோம். செந்தில் பாலாஜியை எல்லாம் நம்பி ஓட்டு கேக்காதீங்க... அவர் ஜெயிச்சுட்டா நாளைக்கு தொகுதி பக்கமே வரமாட்டாருன்னு சொன்னாங்க. இருந்தும் நாங்க அவர் ஜெயிக்கணும்னு கடுமையாக வேலை செஞ்சோம். அவங்க சொன்ன மாதிரியே ஜெயிச்சதுக்கு அப்புறம் அந்த ஆளு செல்போன் நம்பரை மாத்திட்டு ஓடிட்டார்” என்றார்.