`தம்பிதுரை நிகழ்ச்சிக்குள் புகுந்த 6 அடி நீளப் பாம்பு' - பதறிய மக்கள்!

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் 6 அடி நீளப்  பாம்பு புகுந்ததால், பொதுமக்கள் பதறிப் போனார்கள். 

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை மாரியம்மன் கோயில் அருகில் மக்களிடம் கோரிக்கை மனுக்களை நேரடியாகப் பெறும் விதமாக 'மக்களைத் தேடி' நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மக்களவை  துணை சபாநாயகர் தம்பிதுரையும், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் கலந்துகொண்டனர். மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகனும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஆயத்தமான நிலையில், குறைந்த அளவு மக்களே வந்திருந்தனர். இதனால், டென்ஷனில் இருந்த அதிகாரிகளையும் காவல்துறை அதிகாரிகளையும் மேலும் டென்ஷனாக்கியது அங்கே வந்த 6 அடி நீளப்  பாம்பு ஒன்று.

நிகழ்ச்சி நடைபெற இருந்த இடத்தை நோக்கி வந்த அந்தப்  பாம்பைப் பார்த்த ஒரு அதிகாரி அண்ணாமலை படத்தில் ரஜினி சொல்வதைப்போல 'பா...பா..' எனப்  பதற அங்கே வந்திருந்த ஒரு சில மக்களும், மற்ற அதிகாரிகளும் அதைப்  பார்த்துவிட்டு  `பாம்பு' என்றபடி அலறி ஓடினர். விஷயம் தீயணைப்புத் துறைக்கு தெரிவிக்க, அவர்கள் விரைந்து வந்தனர். அதற்குள், அந்தப் பாம்பு இரண்டு ரவுண்டுகள் அடித்துவிட்டு, அருகில் ஓடிய சாக்கடைக்குள் புகுந்துவிட்டது. 6 அடி பாம்பு என்பதால், மக்கள் அனைவரும் பதறி போனார்கள். அங்கே வந்த தீயணைப்புத்துறையினர், சாக்கடைக்குள் புகுந்த பாம்பைச் சல்லடை போட்டுத் தேடினர். குச்சிகளை வைத்துக் குத்திப் பார்த்தனர்; பிரத்யேகக் கிடுக்கியை வைத்து, துழாவிப்  பார்த்தனர்.

ஆரம்பத்தில், அவர்களின் கைகளில் சிக்காமல் டிமிக்கி கொடுத்தது அந்த 6 அடி பாம்பு. இருந்தாலும் தீயணைப்புத் துறையினரின் விடாமுயற்சிக்குப் பரிசாக சிறிது நேரத்தில் அந்தப் பாம்பு அவர்கள் வசம் சிக்கியது. அதன் பிறகே, அந்தப்  பாம்பு எந்தவித அபாயமும் இல்லாத சாரை பாம்பு என்பது தெரியவந்தது. பாம்பு பிடிபட்ட பின்னர்தான் அதிகாரிகளும், பொதுமக்களும் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். இதன்பின்னர் தான்  நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, தம்பிதுரை, எம்.ஆர்.விஜயபாஸ்கர் வசம் கோரிக்கை மனுக்களைக்  கொடுத்துவிட்டு,அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!