வெளியிடப்பட்ட நேரம்: 05:19 (14/05/2018)

கடைசி தொடர்பு:07:17 (14/05/2018)

‘உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வேன்’ - 7 வயது சிறுமியை கொன்றுவிட்டு நாடகமாடிய பெண்

சிறுமி

ஈரோட்டில் நேற்றுமுன் தினம் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்துகிடந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுகா, கருமாண்டிசெல்லிபாளையம் அங்கப்பா வீதியைச் சேர்ந்த சண்முகநாதன் - கனகா தம்பதியினரின் 7 வயது மகள் கனிஷ்கா நேற்றுமுன் தினம் (மே 12-ம் தேதி) குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, வீட்டின் அருகேயுள்ள ஒரு மரத்தடியில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.

சிறுமியின் உடலைக் கைப்பற்றிய பெருந்துறை போலீஸார், உடலில் இருந்த காயத்தினை வைத்து ஒருவேளை சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருந்தனர். பிரேதப் பரிசோதனையின் முடிவில், சிறுமி கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்திருக்கிறது. 

இதுதொடர்பாக, போலீஸார் நடத்திய விசாரணையில் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு மூதாட்டி ஒருவர், சிறுமியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் வனிதா என்ற பெண், சிறுமியை தோளில் தூக்கிச் சென்றதைப் பார்த்தாகத் தெரிவித்தார். இதையடுத்து, வனிதாவிடம் போலீஸார் விசாரணை மேற்கொள்ள, சிறுமியைக் கொலை செய்ததை வனிதா ஒப்புக் கொண்டார். மேலும், போலீஸாரே அதிர்ந்து போகும் அளவுக்கு கொலை செய்ததற்கான காரணத்தையும் கூறியிருக்கிறார்.

கொலை

விசாரணையில், குன்னூர் தூளூர்மட்டம் பகுதியைச் சேர்ந்த வனிதா, 2009-ல் கமலக்கண்ணன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டு, ஏழு வருடங்களுக்கு முன்பு கருமாண்டிச்செல்லிபாளையம் பகுதிக்கு குடிவந்துள்ளனர். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் சண்முகநாதன் - கனகா தம்பதியினருடன் நட்பு ஏற்பட்டிருக்கிறது. கனகாவின் கணவர் சண்முகநாதன் குடிபோதைக்கு அடிமையாகி, குடும்பத்தை சரிவர கவனிக்காமல் இருந்துள்ளார். அப்போது, வனிதாவின் கணவர் கமலக்கண்ணனுக்கும், கனகாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கனகாவின் மகள் கனிஷ்காவை தன் மகள் போல் பாவித்து, கமலக்கண்ணன் செலவு செய்து வந்துள்ளார். இதனால், கமலக்கண்ணனுக்கும், அவர் மனைவி வனிதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 

ஒருவேளை இந்தச்சிறுமி தன்னுடைய கணவர் மூலமாக பிறந்திருக்குமோ!...இவள் உயிருடன் இருந்தால் தனக்கும், தன் மகனுக்கும் நாளைக்கு ஏதேனும் பிரச்னை ஏற்படும் எனக் கருதிய வனிதா, சிறுமியைக் கொலை செய்ய முடிவு செய்திருக்கிறார்.

இந்தநிலையில், நேற்று முன்தினம், வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கனிஷ்காவை திண்பண்டங்கள் தருவதாகக் கூறி வீட்டுக்கு கூட்டிச் சென்ற வனிதா, வாயைப் பொத்தி, கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின், சிறுமியின் உடலைத் தோளில் தூக்கிச் சென்று மரத்தடியில் போட்டுவிட்டு வந்திருக்கிறார். இதையடுத்து, வனிதாவை கைதுசெய்த போலீஸார், பெருந்துறை குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதில் கொடுமை என்னவென்றால், கொலை செய்த வனிதாவே, சிறுமியின் பெற்றோருடன் மருத்துவமனைக்கெல்லாம் சென்று உடனிருந்து, ‘உங்களுக்கு எப்படி நான் ஆறுதல் சொல்வேன்’ என எதுவுமே தெரியாதது போல் நடித்துள்ளார்.