வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/05/2018)

கடைசி தொடர்பு:07:13 (14/05/2018)

மாநில அரசின் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறதா திருப்பதி ஏழுமலையான் நிதி..?

திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் செலுத்தும் காணிக்கை பணத்தை கோடிக்கணக்கில் மாநில அரசு உள்ளூர் மக்களின் மேம்பாட்டிற்கு பயன்படுத்த இருப்பது தற்போது சர்ச்சையாக மாறியிருக்கிறது.

திருப்பதி

திருமலை ஆலயத்தில் நாளொன்றுக்கு 2 கோடி முதல் 3 கோடி ரூபாய் வரையிலான உண்டியல் வருவாய் வருகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்த வருமானத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் நடத்தி வருகிறது. உதாரணத்துக்கு இலவச மருத்துவமனைகள், இலவச உணவு, குடிநீர், பசு மடம், யோகா நிலையம் என்று பல வழிகளில் இந்த வருமானத்தின் மூலம் சேவை செய்து வருகிறது. இப்படி திட்டங்கள் கொண்டு வரும்போது அவற்றுக்கும் தனித்தனியாக நன்கொடைகள்  பக்தர்கள் வழங்கி வருகின்றனர். இது கூடுதல் வருமானமாக அமையும். இப்படி இருக்கத் தேவஸ்தானம் நடத்தி வரும் நலத்திட்டங்களுக்கு இந்த வருமானங்கள் உபயோகிக்காமல் மாநில அரசின் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வருவதாக ராயல் சீமா போராட்டத்தில் தலைவர் நவீன் குமார் தெரிவித்தார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அவர்  ``வரும் 16-ம் தேதி திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் நடைபெற உள்ளது. அன்றையதினம் 10 கோடி ரூபாய் உள்ளூர் மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படப்போவதாக செய்திவந்திருக்கிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஏனென்றால் ஏழுமலையானுக்குப் பக்தர்கள் பக்தியோடு அளிக்கும் காணிக்கைகளை மாநில அரசின் பணிகளுக்கு பயன்படுத்துவது முறை கேடான செயல். இதை பல்வேறு அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் கண்டித்து வருகின்றனர். ஆந்திர மாநில அரசின் ஒரு ஏஜெண்டாகவே திருமலை திருப்பதி தேவஸ்தானம் செயல்பட்டு வருகிறது. அதில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றனர். அறங்காவலர் குழு தமது முதல் கூட்டத்திலேயே உள்ளூர் மேம்பாட்டுக்கு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய உள்ள திட்டத்தை கைவிடாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும்" என்று அவர் எச்சரித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க