Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

“மூணு முறை தோல்வி, ஐ.ஏ.எஸ் படிப்பு தேவையானு கிண்டல்!" சௌமியா குமரன் I.F.S.

Chennai: 

“ 'சௌமியா உன் குடும்பத்தின் சூழ்நிலை என்னன்னு தெரியுமா? நீ பாட்டுக்கு படிக்கப்போறேன் படிக்கப்போறேன்னு சொல்லிட்டுத் திரியுறே. வயசும் ஏறிட்டே போகுது. உன் அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் பாரமா இருக்காம சட்டுபுட்டுன்னு கல்யாணத்தை பண்ணிட்டு போடி'னு என்னைப் பார்க்கும் சொந்தக்காரங்க அட்வைஸா கொட்டினாங்க. 'இவங்க சொல்ற மாதிரி குடும்பத்துக்கு பாரமாத்தான் இருக்கிறோமோ?னு நினைச்சு வேதனையா இருக்கும். புத்தகத்தைக் கையில் எடுக்கும்போது, அந்த வார்த்தைகள் காதுக்குள்ளே சுத்திட்டே இருக்கும். அந்த நேரத்துல அப்பா பக்கத்துல உட்கார்ந்து நம்பிக்கை கொடுப்பாரு பாருங்க... அப்போ முடிவு பண்ணுவேன், சிவில் சர்வீஸ் எக்ஸாம்ல பாஸ் ஆகி கவர்மென்ட் வேலைக்கு போய் காட்டணும்னு. அது இன்னைக்கு சாத்தியமாகி இருக்கு” - கண்கள் நிறைய சந்தோஷத்துடன் பேசுகிறார் செளமியா குமரன். 

ஐ.ஏ.எஸ் கனவோடு பணம் செலுத்தி பயிற்சி வகுப்புகளுக்கு செல்லமுடியாத சூழலில் தவித்துவந்த சௌமியா, இன்று சிவில் சர்வீஸ் தேர்வில் 566-வது ரேங்க்கில் வெற்றிபெற்றிருக்கிறார்.

அமைச்சர் ஜெயக்குமாரோடு சௌமியா மற்றும் குடும்பத்தினர்

“என் சொந்த ஊர், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உடன்குடி. அப்பாவும் அம்மாவும் ஒரு ஹோட்டல் நடத்திட்டிருந்தாங்க. 15 வருஷமா அந்த ஹோட்டல் வருமானம்தான், எங்களுக்கு மூலாதாரமே. நாள் முழுவதும் அடுப்புப் புகையில நின்னு நின்னு அம்மாவுக்கு ஆஸ்துமா வந்துடுச்சு. அதனால், அந்தத் தொழிலை விட்டுட்டு பிழைப்புக்காக சென்னைக்கு வந்துட்டோம். அப்பா இங்கே கார் டிரைவரா இருக்கார். அப்பாவும் அம்மாவும் கஷ்டப்பட்டு படிக்கவைக்கிறாங்க. ஏதோ ஒரு டிகிரியை முடிச்சுட்டு ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து அவங்களுக்கு உதவியா இருக்கலாம்னு நினைக்க முடியல. சிவில் சர்வீஸ் என் லட்சியம் மட்டுமில்லே. என் அப்பாவின் கனவும்கூட. இன்னைக்கு கஷ்டப்படுறோமேனு நாளைய எதிர்காலத்தை பாழாக்கிட முடியுமா? ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில், 'அப்பா, நம்ம தகுதிக்கு கலெக்டர் படிப்பு சரிவராது. வேற எங்கயாச்சும் வேலைக்குப் போகட்டுமா?னு கேட்பேன். உடனே, 'உன் வேலை படிக்கிறது மட்டும்தான். மற்ற விஷயங்கள் பற்றி எதுக்கு கவலைப்படுறே. இப்போ நம்மளை கேலி பேசறவங்க, பெருமையா பாக்கும் காலம் சீக்கிரமே வரும்'னு மோட்டிவேட் பண்ணிட்டே இருப்பார். அவரின் உந்துதல்தான் என்னைத் தொடர்ந்து மூன்று முறை தேர்வு எழுதவெச்சது'' என்கிற செளமியா குரலில் பெற்றோர் குறித்த பெருமிதம் ஒவ்வொரு துளியிலும் தெரிந்தது.

சௌமியா குமரன் I.F.S

``நான் தோத்துட்டிருந்த ஒவ்வொரு முறையும் அப்பா நம்பிக்கை கொடுத்து முன்னோக்கி தள்ளிட்டே இருந்தார். அம்மாவின் ட்ரீட்மென்ட் ஒரு பக்கம், என் தோல்விகள் இன்னொரு பக்கம் என ரொம்ப வாட்டி எடுத்துச்சு. ஃபீஸ் கட்டி இன்ஸ்டிட்யூட் போகும் அளவுக்குப் பணம் கிடையாது.பெரும்பாலும் வீட்டிலிருந்து படிச்சேன். எங்கேயாவது ஃப்ரீயா கோச்சிங் நடந்துச்சுன்னா அட்டென்ட் பண்ணுவேன். சீனியர்ஸை தேடிப்போய் இன்ட்ராக்ட் பண்ணுவேன். இப்படி தொடர்ந்து போராடி, நான்காவது அட்டெம்ட்டில் ஜெயிச்சிருக்கேன். இந்த உணர்வை வார்தைகளால விவரிக்கவே முடியாது. ஆக்சுவலா, லாஸ்ட் டைம் இன்டர்வியூல, 'உங்க ரோல் மாடல் யாரு?'னு கேட்டாங்க. நான் கொஞ்சமும் யோச்சிக்காமல், என் அப்பாதான் எனச் சொன்னேன். 

ரிசல்ட் வர்றதுக்கு முன்னாடிகூட அம்மா ஹாஸ்பிடல்லதான் இருந்தாங்க. ரொம்ப கஷ்டமான சூழல் அது. 20 நாள்களுக்கு அப்புறம் அவங்களை டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு அழைச்சுட்டு வந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் ரிசல்ட் வருது. ஓடிப்போய் அம்மா அப்பாக்கிட்ட, 'உங்க பொண்ணு ஐ.எஃப்.எஸ் ஆகிட்டா'னு சொன்னேன். ரெண்டு பேரும் என்னை கட்டிப் புடிச்சு அழுதாங்க. 'என் பொண்ணு ஜெயிச்சுட்டா. அவ வாழ்க்கையை இனி அவளே பாத்துப்பா'னு சொல்லி பூரிச்சு அழுதாங்க. 'ஐ.ஏ.எஸ் கனவைத் தூக்கி குப்பையில் போடு. உன்னால் அதையெல்லாம் நினைச்சும் பார்க்க முடியாது' என்கிற வார்த்தைகளையே கேட்டுப் பழகின என் காதுகளுக்கு அப்பாவின் சந்தோஷ அழுகை இனம்புரியாத மாற்றத்தைக் கொடுத்துச்சு. அது என் வாழ்க்கையில் மறக்கமுடியாத தருணம்” என்றபடி கண்களிலிருந்து வழியும் கண்ணீரை துடைத்துக்கொண்ட செளமியா சொன்ன கடைசி வார்த்தைகள்... 

``ஐ.எஃப்.எஸ் என்பது சர்வதேச அளவில் இந்தியாவின் பங்கை தோளில் தாங்குற மாதிரி. நான் அந்தப் பங்கை என் தலையில் சுமப்பேன்!” 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement