மைசூருக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கிய நீதிபதி... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 7

காவிரி கடந்து வந்த பாதை குறித்து தொடர் கட்டுரை...

மைசூருக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கிய நீதிபதி... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 7

மைசூரு சமஸ்தானம் 1892-ம் ஒப்பந்தத்தை மீறிச் செயல்பட ஆரம்பித்ததால், அதை எதிர்த்து அப்போதைய சென்னை மாகாண அரசு முறையீடு செய்தது. இரு அரசுக்குமிடையே ஏற்பட்ட காவிரிப் பிரச்னையைத் தீர்த்துவைப்பதற்காக அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஹென்றி க்ரிஃபின் என்பவர், கடந்த 1913-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இவருக்குத் துணையாகப் பிரிட்டிஷ் இந்திய அரசின் நீர்ப்பாசனத் துறை தலைமை ஆய்வாளர் நெதர்சோல் நியமிக்கப்பட்டார். காவிரி நதி நீர்ச் சிக்கலைத் தீர்ப்பதற்காக ஹென்றி க்ரிஃபின் தலைமையில்தான் முதல் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. அதன்பின்னர், இரண்டாவது தீர்ப்பாயம் 1991-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. 

காவிரி

இந்தக் கட்டுரையின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்...

‘க்ரிஃபின் அவார்டு’! 

இருதரப்பு வாதங்களையும் விசாரித்த ஹென்றி க்ரிஃபின், 1914-ம் ஆண்டு மைசூரு அரசுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கினார். அது, ‘க்ரிஃபின் தீர்ப்பு’ (Griffin Award) என்று அழைக்கப்பட்டது. ``கண்ணம்பாடி அணையைக் கட்டுவதன் மூலம் 1892-ம் ஆண்டு ஒப்பந்தத்தின் வழியாகச் சென்னை மாகாண அரசுக்குக் கிடைத்த எவ்வித பிரத்யேகச் சட்ட உரிமைக்கும் குந்தகம் ஏற்படாது” என்று க்ரிஃபின் அந்தத் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். சென்னை ராஜதானி பாசனத்துக்கான நீரின் தேவை 22,750 கன அடி என்கிற உச்சவரம்பையும் அவர் அதில் நிர்ணயித்தார். அதன்படி, 1892-ம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி, சென்னை மாகாணத்துக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நீர் உச்சவரம்பில் 4,000 கன அடியைக் குறைத்தது க்ரிஃபின் தீர்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது. 

மைசூருக்கு ஆதரவான தீர்ப்பு!

“மேலணையில் 7 அடி உயரமும், ஒரு நொடிக்கு 26,750 கன அடியும் தண்ணீர் வந்தால்தான் பழைய பாசனப் பகுதிகளைப் பாதுகாக்க முடியும்; அனுபவ பாத்தியதை உரிமைப்படி உள்ள அளவு தண்ணீரும் கிடைக்கும்” என்று சென்னை அரசு கூறியதுடன், அந்தத் தீர்ப்பையும் ஏற்க மறுத்தது. இந்தத் தீர்ப்புத் தேதியின்போது மைசூரு சமஸ்தானத்தின் விளைநிலப்பரப்பு 1,15,000 ஏக்கராகவும், சென்னை ராஜதானியின் விளைநிலப்பரப்பு 2,25,500 ஏக்கராகவும் இருந்தது. தீர்ப்பை எதிர்த்து சென்னை மாகாண அரசு மீண்டும் மத்திய அரசிடம் முறையீடு செய்தது. க்ரிஃபினின் தீர்ப்பை எவ்வித மாற்றமுமின்றி ஏற்றுக்கொள்வதாக 1916-இல் மத்திய அரசு அறிவித்ததுடன், “தீர்ப்பை மாற்றினால் மைசூருக்கு மிகப்பெரிய அநீதி இழைப்பது போலாகும்” என்று கருத்துச் சொன்னது. 

காவிரி

மீண்டும் பேச்சுவார்த்தை!

மீண்டும் மைசூருக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கப்பட்டதைக் கண்டித்து, சென்னை அரசாங்கம் இங்கிலாந்தில் உள்ள அரசுத் துறைச் செயலாளரிடம் முறையீடு செய்தது. அதன்படி, சென்னை அரசின் மேல்முறையீட்டில் முதல் நோக்கு நியாயம் இருப்பதாக அறிவிக்கப்பட்டதுடன், 1919-ம் ஆண்டு மத்திய அரசின் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது. மேலும், “இந்திய அமைச்சரின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம்; புதிய தீர்ப்பாயத்தை அணுகலாம்; இரு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்திப் புதிய உடன்பாட்டுக்கு வரலாம்” என்ற நிபந்தனைகளையும் விதித்தது. ஆனால், மைசூரு அரசோ, மூன்றாவது நிபந்தனையான பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டது. இதையடுத்து, நீர்ப் பங்கீடு தொடர்பாக இரு அரசுகளுக்கும் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது. முதல்கட்டமாக 1920-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய பேச்சுவார்த்தையில், மைசூரு அரசு சார்பில் எஸ்.கடாம்பியும், சென்னை அரசு சார்பில் டபிள்யூ.ஜே.ஜே.ஹவ்லியும் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையின்போது பிரிட்டிஷ் இந்திய அரசின் நீர்ப்பாசனத் துறை தலைமை ஆய்வாளர் ஜே.ஆர்.ஜே.வார்டும் பங்கேற்றார். 

பாண்டிச்சேரி ஆளுநர்!

ஒருவழியாக, 1921-ம் ஆண்டு ஜூலை மாதம் இரு அரசுகளும் கண்ணம்பாடி அணை கட்டுவதற்குரிய வரைவு விதிகளையும், ஒழுங்குமுறைகளையும் இறுதி செய்தபோதிலும் அதிருப்தியே நிலவியது. இதனால் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது. இப்படித் தொடங்கிய பேச்சுவார்த்தை 1924-ம் ஆண்டுவரை நீடித்தது. இதில் கடிதப் பரிமாற்றங்களும் அடக்கம். குறிப்பாக, இந்தப் பேச்சுவார்த்தையின்போது, பாண்டிச்சேரி ஆளுநரும் களமிறங்கி, “சென்னை - மைசூரு இடையே கையெழுத்தாகும் ஒப்பந்தம் எந்த வகையிலும் காரைக்கால் விவசாயத்தைப் பாதித்துவிடக் கூடாது. ஆகவே, பாண்டிச்சேரியை சென்னை ராஜதானி கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். 

காவிரி

இறுதியில் 1924-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் சென்னை அரசு சார்பில் ஹாக்கின்ஸும், மைசூரு அரசின் சார்பில் திவான் ஏ.ஆர்.பானர்ஜியும் கையெழுத்திட்டனர்.
 
மைசூரு திவான் பாராட்டு!

``இந்த ஒப்பந்தம் இருதரப்பும் விட்டுக்கொடுத்து உருவானது” என்றார், மைசூரு திவான் ஏ.ஆர்.பானர்ஜி. இந்த ஒப்பந்தம் குறித்து மேலும் அவர், ``தொழில்நுட்ப அதிகாரிகளைப் பொறுத்தவரை அவர்கள் பணி எளிதானதல்ல. வேறுபாடு கொண்ட அம்சங்கள் எண்ணிலடங்காதவை. பலகட்டங்களில் இருதரப்பினருக்கும் இடையே சமாதானம் வர முடியாது என்ற நிலை ஏற்பட்டதை ஒப்புக்கொள்ள வேண்டும். சென்னைத் தரப்பைச் சேர்ந்த ஹவ்லி, மோரின், ராமலிங்க ஐயர் மற்றும் மைசூரு தரப்பைச் சேர்ந்த கடாம்பி, கர்ப்பூர் சீனிவாச ராவ் ஆகியோர் வரலாற்றில் நிற்பார்கள். இவர்கள் விவரங்களை எடுத்துவைப்பதில் முதல் தரமான திறனும் பரந்துவிரிந்த அறிவும் பெற்றிருந்தனர். அதேசமயம், பேச்சுவார்த்தையில் கொடுத்து வாங்கும் உணர்ச்சி இவர்களிடம் மேலோங்கி இருந்தது. தங்கள் பகுதி மக்களின் நலனையும் செழிப்பையும் கைவிடும் வகையில் இவர்கள் யாரும் தங்கள் தரப்பின் அடிப்படை அம்சங்களை விட்டுவிடாமல் பேசினர்” என்று குறிப்பிட்டுள்ளார். 

- காவிரி பாயும்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!