காவிரி விவகாரம் - இன்றாவது வரைவுத் திட்டம் தாக்கல்செய்யுமா மத்திய அரசு?

காவிரி விவகாரத்தில் இன்றாவது மத்திய அரசு வரைவுத் திட்டம் தாக்கல்செய்யுமா என்று தமிழக விவசாயிகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

உச்சநீதிமன்றம்


காவிரி விவகாரம் தொடர்பாக, தமிழகத்துக்கும் கர்நாடகாவுக்கும் இடையே கடும் பிரச்னை நிலவிவருகிறது. காவிரி விவகாரத்தில், கடந்த பிப்ரவரி 16-ம் தேதி இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், தமிழகத்துக்கு 177.24 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் மற்றும் 6 வாரங்களுக்குள் ‘ஸ்கீம்’ அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் முன்னதாக உத்தரவு பிறப்பித்திருந்தது. 
ஆறு வார கால அவகாசம் முடிவடைந்தும் வாரியம் அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் மத்திய அரசு முன்னெடுக்கவில்லை. அவகாசம் முடிவடைய சில தினங்களே இருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் அறிவித்த தீர்ப்பில் இருந்த ‘ஸ்கீம்’ என்ற வார்த்தையின் விளக்கம் கேட்டும், தீர்ப்பில் கூறப்பட்டுள்ள செயல் திட்டத்தை அமல்படுத்த மேலும் கால அவகாசம் கேட்டும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது.  

காலம் கடந்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், வாரியம் அமைக்கக் கோரியும் தமிழகத்தில் கடந்த மாதம் பல போராட்டங்கள் நடைபெற்றன. கடையடைப்பு, சாலை மறியல், உண்ணாவிரதம், பேரணி எனப் பல வகையில் போராட்டங்கள் நடைபெற்று ஓய்ந்தன. தமிழகத்தில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகளும் தடை செய்யப்பட்டு, வேறு இடத்துக்கு மாற்றப்பட்டன.  உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத மத்திய அரசுமீது, தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. மத்திய அரசு தொடர்ந்த வழக்கையும், தமிழக அரசின் மனுவும் ஒன்றாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்த வழக்கின் விசாரணை, கடந்த மாதம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அதில், மத்திய அரசின் மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், மே 3-ம் தேதி காவிரி வரைவுத் திட்டத்தைத் தாக்கல்செய்ய வேண்டும் என உத்தரவு வழங்கியது. மேலும்  ‘ஸ்கீம் ‘ பற்றி தற்போது எதுவும் கூற முடியாது எனவும் கூறியிருந்தது.

மே 3-ம் தேதி, மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், காவிரிப் பங்கீடு தொடர்பாக வரைவுத் திட்டம் தயாராக உள்ளது அதற்கு அமைச்சரவையின் ஒப்புதலும், பிரதமரின் கையெழுத்தும் பெற வேண்டும். தற்போது, கர்நாடகத் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் ஈடுபட்டுள்ளதால் வரைவுத் திட்டத்தில் கையெழுத்துப் பெறுவது சற்று கடினமாக உள்ளது. எனவே, மேலும் ஒரு வாரம் அவகாசம் வேண்டும் என மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் கூறினார். இதற்குப் பதிலளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள்,  மத்திய அரசைக் கடுமையாகச் சாடினர். பின்னர், காவிரி விவகாரத்தில் அரசியலைக் கலக்கக் கூடாது என்றும், உடனடியாக தமிழகத்துக்கு கர்நாடகாவில் இருந்து 4 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட வேண்டும். நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாவிட்டால், கர்நாடகம் கடுமையான பின்  விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனக் கூறிவிட்டு, வரும் 14-ம் தேதி மத்திய அரசு கண்டிப்பாக வரைவுத் திட்டத்தைத் தாக்கல்செய்தே ஆக வேண்டும் எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தனர். 

அதன்படி இந்த வழக்கின் விசாரணை இன்று காலை நடைபெற உள்ளது.  மே 3-ம் தேதி நடந்த விசாரணையில் உச்ச நீதிமன்றம் கூறியிருந்த 4 டி.எம்.சி நீரை கர்நாடகா இதுவரை திறந்து விடவில்லை இதற்கு நீதிமன்றம் என்ன நடவடிக்கை எடுக்கும் என்றும் மத்திய அரசு இன்றாவது வரைவுத் திட்டத்தைத் தாக்கல் செய்யுமா என்றும் தமிழக விவசாயிகள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!