``மத்திய அரசுக்கு எதிராகப் போராடத் தயாராகுங்கள்!’' - திருமாவளவன் அழைப்பு

`நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காது மத்திய அரசு. மே 14-க்குப் பிறகு எல்லோரும் மத்திய அரசுக்கு எதிராகப் போராடத் தயாராகுங்கள்' என்று பி.ஜே.பி அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார் திருமாவளவன்.

                             திருமாவளவன்


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மீன்சுருட்டியில், திருமணம் மற்றும் கட்சி நிகழ்ச்சிக்காகப் பங்கேற்க வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, ``நடந்து முடிந்த நீட் தேர்வில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு தயாரிக்கப்பட்ட கேள்வித் தாளில், ஏறத்தாழ 50 பிழைகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால், 196 மதிப்பெண்கள் பெற முடியாத நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு, சி.பி.எஸ்.இ தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும். எனவே, சி.பி.எஸ்.இ நிர்வாகம், தமிழ் வினாத்தாள் பயன்படுத்திய மாணவர்களுக்கு, 196 மதிப்பெண்களை (கிரேஸ் ஆக) வழங்க வேண்டும். வரும் கல்வியாண்டுகளில் கேள்வித் தாள்கள் தயாரித்தல், தேர்வு மையங்கள் தேர்வுசெய்வது, தேர்வுகளை நடத்துதல் ஆகியவற்றை மாநில கல்வி வாரியத்திடம் அளிக்க வேண்டும். இந்திய அளவில் நீட் தேர்வு கூடாது என்பதே எங்களின் நிலைப்பாடு என்றார். 

                                          திருமாவளவன்

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால அவகாசம் கேட்டு சிக்கலை மேலும் நீட்டித்துக் கொண்டு செல்லும் மத்திய அரசு, நாடாளுமன்றத் தேர்தல் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. காவிரிப் பிரச்னையில், மே 14-ம் தேதிக்குப் பிறகு ஒருங்கிணைந்து, இறுதிக்கட்டப் போராட்டத்தை முன்னெடுக்கவேண்டிய நிலை உருவாகும். ஆகவே, அனைத்துத் தரப்பு மக்களும் போராடத் தயாராக வேண்டும். ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்னை நீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும், மக்களின் நலனைக் காக்க தமிழக அரசு தடைசெய்ய முடியும். 22-ம் தேதி அப்பகுதி மக்கள் சார்பில் நடக்கும் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும் எனக் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!