வேளாண் பல்கலைக்கழகத்திலும் இனி ஆன்லைன் கலந்தாய்வு

அண்ணா பல்கலைக்கழகத்தைத் தொடர்ந்து, வேளாண்மை பல்கலைக்கழகத்திலும், நடப்பு கல்வியாண்டு முதல் ஆன்லைன் கலந்தாய்வு முறை அமல்படுத்தப்பட உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தைத் தொடர்ந்து, வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலும், நடப்பு கல்வியாண்டு முதல் ஆன்லைன் கலந்தாய்வு முறை அமல்படுத்தப்பட உள்ளது.

ஆன்லைன் கலந்தாய்வு

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைகுறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. அதன்படி, நடப்பு கல்வியாண்டுக்கான இளம் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விவரங்கள், வரும் 18-ம் தேதி பத்திரிகைகளில் வெளியிடப்படும். அன்றைய தினம் முதலே ஆன்லைன்மூலம் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யத் தொடங்கலாம். ஆன்லைன் விண்ணப்பங்களைப் பதிவேற்ற, ஜூன் 16-ம் தேதி கடைசி நாளாகும். இதைத்தொடர்ந்து, முன்னாள் ராணுவ வீரர், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் சந்ததியினர், விளையாட்டு வீரர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற சிறப்பு ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 18-ம் தேதி முதல், 20-ம் தேதி வரை நடைபெறும்.

தர வரிசைப் பட்டியல் ஜூன் 22-ம் தேதி வெளியிடப்பட்டு, சிறப்பு ஒதுக்கீடுகளுக்கான கலந்தாய்வு ஜூலை 7-ம் தேதி நடைபெறும்.  அதன்பிறகு, ஆன்லைன் வழியாக முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெறும். தொழில் கல்விக்கான கலந்தாய்வு 16-ம் தேதியும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான கலந்தாய்வு  ஜூலை 17, 18 தேதிகளில் நடைபெறும். இரண்டாம் கட்ட கலந்தாய்வு,  ஜூலை 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெறும். இதையடுத்து,  ஆகஸ்ட் 1-ம் தேதி கல்லூரி தொடங்கும் என்றும் ஆகஸ்ட் 31-ம் தேதி மாணவர் சேர்க்கை முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராமசாமி கூறுகையில், “நடப்பு கல்வியாண்டு முதல் முழுக்க முழுக்க ஆன்லைன் கலந்தாய்வு முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கலந்தாய்வு முறையை எளிமைப்படுத்துவதற்காக ஆன்லைன் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகள் போன்ற சிறப்புப் பிரிவினர்க்கு மட்டும் நேரடிக் கலந்தாய்வு நடைபெறும்” என்றார்.

ஏற்கெனவே, அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் கலந்தாய்வு முறை அறிவிப்பு பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ள நிலையில், தற்போது வேளாண் பல்கலைக்கழகத்திலும் ஆன்லைன் கலந்தாய்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!