`நான் வந்துவிடுகிறேன் மேடம்' - சென்னை காவலரின் உயிரைப் பறித்த போன் அழைப்பு

காவலர் பாலமுருகன்

 சென்னை ஆயுதப்படை காவலர் பாலமுருகன், வீட்டின் கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். 

சென்னை ஈஞ்சம்பாக்கம், பொதிகை நகரைச் சேர்ந்தவர் விஜயரங்கன். சைக்கிளில் டீ விற்றுவருகிறார். இவரின் மனைவி காளியம்மாள். இவர்களின் மகன் பாலமுருகன். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன், தமிழக காவல்துறையில் காவலராகப் பணியில் சேர்ந்தார். தற்போது, சென்னை அசோக்நகரில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் பாலமுருகனுக்கு பணி ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களாகப் பாலமுருகனுக்கு உடல் நலம் சரியில்லை. இதனால், அவர் விடுமுறையில் இருந்துள்ளார். நேற்று அவர் பணிக்குச் சென்றுவிட்டு, பிறகு வீட்டில் தூங்கினார். பாலமுருகனின் வீட்டின்  கழிவறையின் கதவு நீண்ட நேரமாகத் திறக்கப்படாததால், வீட்டில் உள்ளவர்கள் சந்தேகம் அடைந்தனர். பிறகு, கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுப்பார்த்தபோதுதான் பாலமுருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது. இதையடுத்து, நீலாங்கரை போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார், பாலமுருகனின் சடலத்தை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். 

 இதுகுறித்து விஜயரங்கன் கூறுகையில், "கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த வேலை பிடிக்கவில்லை என்று பாலமுருகன் என்னிடம் தெரிவித்தார். அப்போது, 'உன் விருப்பம் எதுவோ அதைச் செய்' என்று கூறினேன். கடந்த சில தினங்களாக உடல் நலம் சரியில்லை என்று விடுமுறையில் இருந்தார். அப்போதுதான், அவருக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில், 'நான் வந்துவிடுகிறேன் மேடம்' என்று பேசிக்கொண்டிருந்தார். பிறகு வேலைக்குச் சென்றார். அதிகாலையில் டீ விற்கச் செல்லும்போதுகூட அவர் தூங்கிக் கொண்டிருந்தார். அதன்பிறகுதான் இந்த முடிவை எடுத்துள்ளார். அவருடன் பிறந்த இரண்டு சகோதரிகளில் ஒருவருக்கு திருமணம் முடிந்துவிட்டது. அடுத்து, பாலமுருகனுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு நடந்தது. 'ஐந்து பெண்களைப் பார்த்துள்ளோம். விரைவில் மணக்கோலத்தில் அவரைப் பார்ப்போம்' என்று நினைத்த எங்களுக்கு, அவரின் இழப்பு கடும் அதிர்ச்சி அளிக்கிறது" என்றார் கண்ணீர்மல்க 

 தமிழகக் காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள், தற்கொலைசெய்துகொள்வது தொடர்கதையாகிவருகிறது. மனஅழுத்தம், பணிச்சுமை, உயரதிகாரிகளின் டார்ச்சர், குடும்பச் சூழல் ஆகியவை காரணமாகத்தான் தற்கொலைச் சம்பவம் நடக்கிறது. அதைத் தடுக்க யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டாலும், தற்கொலைச் சம்பவங்கள் தடுக்கப்படவில்லை. 

காவல் துறையினரின் தற்கொலைச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!