வெளியிடப்பட்ட நேரம்: 13:08 (14/05/2018)

கடைசி தொடர்பு:13:08 (14/05/2018)

நிர்வாகிகள் கூட்டத்தில் ரஜினி சொன்ன மூன்று மந்திரங்கள்! 

 ரஜினி

'பாபா' படத்தில் ரஜினி சொல்லும் மூன்று மந்திரங்கள் போல, தனது கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில், மூன்று கட்டளைகளை அவர் பிறப்பித்துள்ளார்.

 கடந்த 10-ம் தேதி, மாவட்டச் செயலாளர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார் ரஜினி. தமிழகம், புதுச்சேரியில் உள்ள இளைஞரணி மாவட்டச் செயலாளர்களை சென்னை போயஸ்கார்டன் வீட்டில் சந்தித்தார். அவர்களுடன் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள முக்கிய பிரச்னைகள் ஆலோசிக்கப்பட்டன. கட்சியின் பெயர், கொடி அறிமுகம் உள்ளிட்டவைகுறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள், அறிக்கை மற்றும் பேட்டி எதுவும் கொடுக்கக் கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதால், நீண்ட தயக்கத்துக்குப் பிறகு கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் நம்மிடம் பேசினர்.

  "ஒரே காலத்தில் ரஜினியும் கமலும் சினிமாவுக்குள் வந்தனர். அதுபோலத்தான், அவர்கள் இருவரும் அரசியலிலும் கால்பதித்துள்ளனர். கமல், மக்களைச் சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார். விரைவில் ரஜினியும் மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காக, ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 'பாபா' படத்தில் ரஜினி சொல்லும் மூன்று மந்திரங்கள் போல, ஆலோசனைக் கூட்டத்திலும் மூன்று  விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 
 

ரஜினி

முதலாவதாக, 'ரஜினி மக்கள் மன்றத்தை', 'ரஜினி மக்கள் சேவை மன்றம்' என்று மாற்றுவதென முடிவெடுத்திருக்கிறார்கள். முதலில் உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்திய தலைமை, தற்போது ஒரு பூத்துக்கு 30 பேரை கட்டாயம் நியமிக்குமாறு தெரிவித்துள்ளது. அதற்கான உறுப்பினர் சேர்ப்புப் படிவங்களையும் அளித்திருக்கிறார்கள். 

இரண்டாவதாக, வரும் பாராளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணியில்லாமல் தேர்தலைச் சந்திக்கத் தயாராகுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘பா.ஜ.க-வுடனும் கூட்டணி இல்லையா?’ என்ற பிந்தைய விசாரணைகளுக்கும், ‘அதெல்லாம் எதுக்கு இப்போ... கூட்டணி இல்லைனு நினைச்சு வேலை பாருங்க’ என்றே அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மூன்றாவதாக, பூத் கமிட்டியில் அதிக அளவில் உறுப்பினர்களை நிர்வாகிகள் சேர்க்க வேண்டும். இல்லையெனில், கட்சிப் பதவிகள் வழங்கப்படாது என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று கட்டளைகளைக் கூறியதோடு, ரசிகர் மன்றத்தினருக்கு எதிர்பார்க்காத பதவிகளும் வழங்கப்படும் என்று மறைமுகமாக கட்சித் தலைமை தெரிவித்துள்ளது'' என்றனர். 

ரஜினியின் அதிரடி அறிவிப்பால், ரசிகர்களும் தொண்டர்களும் உற்சாகத்தில் உள்ளனர். ஆலோசனைக் கூட்டத்தில் ரசிகர் மன்றத்தினரிடம் நீண்ட நேரம் விவாதித்துள்ளனர். அப்போது, தன்னுடைய குடும்பத்திலிருந்து யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள். கட்சிக்கொடி, பெயர், பதிவு உள்ளிட்ட பணிகள் துரிதமாக நடந்துவருகிறது என்றும் ரஜினி தெரிவித்தாராம்.