வெளியிடப்பட்ட நேரம்: 14:15 (14/05/2018)

கடைசி தொடர்பு:11:42 (15/05/2018)

திருப்பூர் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி சரிவு

திருப்பூர் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் 8 சதவிகிதம் சரிவடைந்துள்ளது.

ஆயத்த ஆடை மையமான திருப்பூரிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஆயத்த ஆடைகள் கடந்த 2017-18-ம் நிதியாண்டில் 8 சதவிகிதம் குறைந்து ரூ.24,000 கோடியாகச் சரிவடைந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் முதன் முறையாகத் திருப்பூரிலிருந்து இதன் ஏற்றுமதி குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆயத்த ஆடைகள், கடந்த 2016-17-ம் நிதியாண்டில் ரூ.26,000 கோடியாக இருந்தது. இது இதற்கு முந்தைய ஆண்டைவிட 13 சதவிகிதம் அதிகமாகும். ஏற்றுமதிக்கு வழங்கப்பட்டு வந்த வரிச்சலுகைகள் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி குறைந்துள்ளது.

ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வரிச்சலுகை கடந்த 2017-18-ம் நிதியாண்டின் பாதியில் 7.6 சதவிகிதத்திலிருந்து 2 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. இதையடுத்து, ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில் இந்தியா அண்டை நாடுகளான இலங்கை, வங்க தேசம் ஆகியவற்றுடன் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டி.ஆர்.விஜயகுமார் கூறுகையில், ``கடந்த செப்டம்பர் மாதம் வரையில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி 6 சதவிகிதம் வரையில் வளர்ச்சி கண்டு வந்தது. அக்டோபர் மாதத்திலிருந்து இதன் ஏற்றுமதி மாதம்தோறும் 13 - 14 சதவிகிதம் சரிவடைந்துள்ளது. மேலும் இலங்கை, வங்க தேசம் ஆகிய நாடுகள், ஆயத்த ஆடைகளை அதிகம் வாங்கும் நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு வரி எதுவும் இல்லாமல் ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்து வருகின்றன. இதனால், இந்திய ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது’’ என்று குறிப்பிட்டார்.

நாட்டின் மொத்த ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில் திருப்பூரின் பங்களிப்பு 46 சதவிகிதமாக உள்ளது. நாட்டில் மொத்த ஏற்றுமதியும் கடந்த ஆண்டு சரிவை சந்தித்தன. இதில் திருப்பூர் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி 5 சதவிகிதம் குறைந்து ரூ.52,170 கோடியாகச் சரிவடைந்துள்ளது.

ஜி.எஸ்.டி மற்றும் மாநில வரி விகிதங்களிலிருந்து ஏற்றுமதியாளர்களுக்கு வர வேண்டிய ரிட்டன் வராத காரணத்தால், நிறுவனங்களின் நடைமுறை மூலதனம் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான ஏற்றுமதியாளர்களுக்கு பிப்ரவரி மாதத்துக்குப் பிறகே ரிட்டன் கிடைத்தது. 

ஆயத்த ஆடைகள்

நிதி பற்றாக்குறையால் புதிய ஆர்டர்கள் எடுப்பது பாதிக்கப்பட்டது. இதை, நமது போட்டி நாடுகள் அவர்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன. அரசு  ஏற்றுமதியாளர்களுக்கு வரியின்றி ஏற்றுமதி செய்ய ஊக்கமளிக்க வேண்டும். இல்லையேல் மீண்டும் முன்பு இருந்ததுபோல் வரிச்சலுகை திட்டத்தைக் கொண்டு வந்து இழந்த சந்தையை மீண்டும் பிடிக்க வழி வகை செய்ய வேண்டும். ஏற்றுமதியாளர்கள் சந்தையை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். அதேசமயம், இந்த முயற்சி அந்த அளவுக்கு பலன் அளிக்கவில்லை. போட்டி நாடுகளும் மேற்கண்ட நாடுகளுக்குத் தங்களின் சந்தையை விரிவுபடுத்தி வருகின்றன என்று  திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சண்முகம் குறிப்பிட்டார்.

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள ஒரு தேக்கநிலையாலும், ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.