வெளியிடப்பட்ட நேரம்: 15:34 (14/05/2018)

கடைசி தொடர்பு:20:13 (14/05/2018)

குளிர்பானங்கள் முதல் அழகு நிலையம் வரை... திருநங்கைகள் ஒன்லி சுயஉதவிக் குழு!

குளிர்பானங்கள் முதல் அழகு நிலையம் வரை... திருநங்கைகள் ஒன்லி சுயஉதவிக் குழு!

``எதை இழக்கிறோம் என்ற மயக்கத்தில், 

அனஸ்தீஸியா இல்லாமலேயே

அறுத்துக் கதறும் நொடியிலும்...

செருப்புக்கு அடியில் தன்மானத்தை

மலமென்றே மிதித்தபடி,

கைநீட்டி கேவலப்பட்டு நிற்கும் நாட்களிலும்...

வன்மத்துடன் நுழையும் குறியால் மூச்சுமுட்ட,

நுரையீரல் திணறி நிற்கும் நாட்களிலும்...

எதற்கென்றே புரியாமல் எங்களை நோக்கி உமிழப்படும்

வீச்சமடிக்கும் எச்சில்களைக் கேட்கிறேன்...

மரணம் மட்டுமா மரணம்?" - 'லிவிங் ஸ்மைல்' வித்யா எழுதிய இந்தக் கவிதை ஒன்று போதும் திருநங்கைகளின் மொத்த வாழ்வியலைச் சொல்ல.

திருநங்கை கஜோல்

சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழ்பவர்கள் திருநங்கைகள். மத்திய அரசின் ``மாற்றுப் பாலினத்தவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு மசோதா 2016"-ல் எந்த அமைப்புகளும் மாற்றுப்பாலினத்தவர்களைப் புறக்கணிக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்டத் துறைகளில் மாற்றுப்பாலினத்தவர்களை புறக்கணிக்கக் கூடாது என்பதே அந்த மசோதா சொல்ல வரும் செய்தி. ஆனால், நிஜத்திலோ நிலைமை அப்படியே தலைகீழாக உள்ளது. அரசு என்னதான் திட்டங்கள் தீட்டினாலும், திருநங்கைகளின் வேதனை இன்னும் தீர்ந்தபாடில்லை.

சமீபகாலமாக திருநங்கைகள் பலரும் தங்களின் ஆளுமையைச் சமூகத்தில் தைரியமாக வெளிப்படுத்தி, அவர்களின் இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்து வருகின்றனர். அதற்கு சமீபத்திய உதாரணம், போலீஸ் பிரித்திகா யாஷினி. அந்த வரிசையில் புதிதாக இணைந்திருப்பவர்கள், திருச்சி ஏஞ்சல் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த திருநங்கைகள். 

தமிழகத்தில் புதிய முயற்சியாக, முதல்முறையாக மகளிர் திட்டத்தின்கீழ், திருநங்கைகள் இடம்பெற்றுள்ள சுயஉதவிக்குழு அங்கீகரிக்கப்பட்டு, அவர்களுக்குத் தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன. இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு வியந்த நாம், நூல்பிடித்து சம்பந்தப்பட்ட கடைக்கு ஒரு `விசிட்' அடித்தோம். 

திருநங்கை செல்வி

திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் `ஏஞ்சல் சுயஉதவிக்குழு கடை' என்னும் போர்டைத் தாங்கியபடி நிற்கிறது அந்தக் கடை. கடையில் குளிர்பானப் பொருள்கள் மற்றும் ஃபேன்சி பொருள்கள் விற்பனை செய்து வருகின்றனர். இந்தக் கடையைப் பற்றி உள்ளே இருந்த திருநங்கை செல்வியிடம் விசாரித்தோம். அவர் கூறுகையில், ``எனக்குச் சொந்த ஊரே திருச்சிதான். நான் பதினாறு வயசுலயே வீட்டைவிட்டு வெளியே வந்துட்டேன். அதற்கப்புறம் மும்பை, டெல்லின்னு டான்ஸ் ஆடிக்கிட்டே என் வாழ்க்கையை ஓட்டிட்டேன். சில ஆண்டுகளுக்கு முன் திரும்பவும் நான் திருச்சிக்கே வந்துட்டேன். வாழ்க்கையின் மீது ஒரு பிடிப்பே இல்லாம இருந்துச்சு. எங்களை எந்த இடத்திலேயும் மதிக்க மாட்டாங்க. திருச்சியில் நான் தங்கறதுக்கு ஒரு வீடு கிடைக்க எனக்குப் பல மாசம் ஆச்சு. அப்போதான், பியூட்டிஷன் காஜலைச் சந்திச்சேன். இந்தச் சுயஉதவிக் குழுவைத் தொடங்கினோம். எனக்கு அறுபது வயசாகிறது. ரொம்ப நாளா இந்த மாதிரி ஒரு கடை ஆரம்பிக்கணும்னு கலெக்டர்கிட்ட கோரிக்கை வெச்சுக்கிட்டே இருந்தோம். திருச்சிக்கு நிறைய கலெக்டருங்க வந்தாங்க. ஆனால், எங்களோட கோரிக்கை மட்டும் அப்படியே இருந்துச்சு. இப்போ இருக்குற கலெக்டர் ராசாமணி எங்களோட மனுவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, எங்களுடைய சுயஉதவிக் குழுவையும் அங்கீகரிச்சார். அதன்பிறகு அவரே மகளிர் திட்ட அலுவலர் பாபுவிடம் சொல்லி அவரின் மூலம் இந்தக் கடையை வழங்கியுள்ளார். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றத்தான் தினந்தினம் போராடிட்டு இருக்கோம். நிறைய வாடிக்கையாளர்கள் வர்றாங்க. ஒரு பிரச்னையும் இல்லை. இப்போ நிம்மதியா வாழ்ந்திட்டு இருக்கோம்" என்றார்.

திருநங்கைகள் சுயஉதவிக் குழுவுக்குக் கடை கிடைக்கக் காரணமாக இருந்த மற்றொரு நபரான `சேப்' தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் கஜோலிடம் பேசினோம். அவர், ``இந்தக் கடைக்காக நாங்க பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. 2014- ம் ஆண்டிலிருந்தே தொடர்ந்து ஆபீஸருங்ககிட்ட வலியுறுத்திக்கிட்டே இருந்தோம். அப்போல்லாம் எங்களை சிட்டிக்குள்ள அனுமதிக்கவே மாட்டாங்க. எங்களை தப்பாத்தான் பார்ப்பாங்க. ஆனால், மத்தவங்களை மாதிரி நாமும் சாதனை செய்யணும் என்பதில் நாங்கள் உறுதியா இருந்தோம். எங்களைப் பார்க்கும் ஆபீஸருங்களாம், `நீங்க ஆம்பளையும் கிடையாது. பொம்பளையும் கிடையாது. உங்களுக்கு இந்த மாதிரி கடைகள் கொடுக்குறதுல நிறைய சிக்கல்கள் இருக்குன்னு' சொல்வாங்க.

ஏஞ்சல் சுயஉதவிக் குழு

அதுவரைக்கும் தனியா கேட்டுட்டு இருந்தோம். ஒருகட்டத்திற்கு மேல் திருநங்கைகளுக்குன்னு சுய உதவிக் குழு ஒன்றை ஆரம்பிச்சு, குழுவா போராட ஆரம்பிச்சோம். அந்தச் சமயத்தில்தான், திருச்சிக்குக் கலெக்டரா ராசாமணி சார் வந்தாரு. அவரு எங்களை ஒதுக்காம எங்க கோரிக்கைகளைக் காது கொடுத்துக் கேட்டாரு. மகளிர் திட்ட அலுவலர் பாபு சார்கிட்ட கலெக்டர், `இவங்க உழைக்கணும்னு ஆசைப்படுறாங்க. இவங்களுக்கு நாமதான் ஆதரவா இருக்கணும். அவங்களுக்கு ஒரு கடையை சுயஉதவிக் குழுவின் மூலம் ஏற்படுத்திக் கொடுங்கன்னு' சொன்னாரு. அதன்பிறகு ஒருவழியாக இந்தக் கடையை ஆரம்பிச்சிட்டோம். கடையை `ஏஞ்சல் சுயஉதவிக் குழு' என்ற பெயரிலேயே ஆரம்பிச்சோம். இந்தக் கடையில் செல்வி, சகாயமேரி, காயத்ரி, சரண்யா பேகம் மற்றும் சுதான் என ஐந்து திருநங்கைகள் இந்தக் கடையில் வேலை பார்க்குறாங்க. நான் ஒரு பியூட்டிஷன். மத்த ஐந்து பேருக்கும் இந்த மாதிரி கடை நடத்துறது புதுசுங்குறதால அவங்களுக்கு துணையாக இருக்கலாம்னு இந்தக் கடையைப் பாத்துக்குறேன். யாரும் எங்களிடம் இதுவரைக்கும் ஒரு பிரச்னையும் பண்றதில்லை. ஒரு டீம் ஒர்க்கா நல்லா போயிட்டுருக்கு. சந்தோஷம்" என்று முடித்தார்.

திருநங்கைகள் தற்போது படித்து பட்டதாரி ஆனாலும், அவர்களை ஒருவித மோசமான பார்வையிலேயே பார்க்கும் சமூகத்தில்தான் அவர்கள் வாழ்ந்தாக வேண்டும். திருநங்கைகள் குறித்த பார்வை முற்றிலுமாக மாறிவிடவில்லை. எனினும், இதுபோன்று ஆங்காங்கே நடக்கும் சில அபூர்வ நிகழ்வுகள், திருநங்கைகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், அவர்களுக்கு எதிர்காலம் குறித்த நம்பிக்கையைத் தருகின்றன. 

-இன்னும் நிறைய சாதிக்க வாழ்த்துகள்...


டிரெண்டிங் @ விகடன்