நோன்புக் கஞ்சிக்கான மானிய விலை அரிசி வழங்குவதில் அதிகாரிகள் அலட்சியம்! ஆட்சியரிடம் புகார் | Muslim Jamath peoples files complaint against officials over delay in distributing Rice for Ramzan gruel

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (14/05/2018)

கடைசி தொடர்பு:17:20 (14/05/2018)

நோன்புக் கஞ்சிக்கான மானிய விலை அரிசி வழங்குவதில் அதிகாரிகள் அலட்சியம்! ஆட்சியரிடம் புகார்

ரம்ஜான் மாதம் நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில் பள்ளி வாசல்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட வேண்டிய மானிய விலை அரிசி இதுவரை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

 

ரம்ஜான் மாதம் நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில், பள்ளிவாசல்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படவேண்டிய மானிய விலை அரிசி இதுவரை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இஸ்லாமியர்கள், தங்களது புனித மாதமான ரம்ஜான் மாதம், வரும் புதன்கிழமை துவங்க உள்ளது. ரம்ஜான் மாதத்தின் 30 நாள்களும் பகல் முழுவதும் எந்த உணவையும் எடுத்துக்கொள்ளாமல், நோன்பு இருப்பது வழக்கம். சூரியன் மறைந்த பின்னர், தினசரி மாலையில் நோன்பை முடிப்பார்கள். அப்போது, நோன்புக் கஞ்சி எனப்படும் அரிசிக்கஞ்சி குடிப்பது வழக்கம். இதற்காக, அரசு மானிய விலையில் அரசி வழங்கிவருகிறது. இந்த வருடம், நாளை மறுநாள் நோன்புக்கஞ்சி காய்ச்ச வேண்டும். ஆனால், இதுவரை அதற்கான அரசியை எந்த மாவட்டத்திலும் வழங்கவில்லை என்று தெரிகிறது. 

மதுரை மாவட்டத்தில் உள்ள 126 பள்ளிவாசல்களுக்கும் அரிசி வழங்கவில்லை என இஸ்லாமிய ஜமாத் நிர்வாகிகள் இன்று மதுரை மாவட்ட ஆட்சிரிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து ஜமாத் நிர்வாகிகள் கூறுகையில், `நாளை அல்லது நாளை மறுநாள் நோன்பு பிடிக்க வேண்டும். ஆனால், அரசு இதுவரை நோன்புக் கஞ்சி தயாரிக்க அரிசி கொடுக்கவில்லை. ஒருவாரமாக, இன்று  வாருங்கள்...  நாளை வாருங்கள், மாலை வாருங்கள் என்று கூறி அலைக்கழிக்கின்றனர். மானிய விலை அரிசியைக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், கொடுக்க முடியாது என்று கூற வேண்டும். இதுபோன்று இழுத்தடிப்பு செய்யக் கூடாது’ என்றனர்.