வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (14/05/2018)

கடைசி தொடர்பு:07:19 (15/05/2018)

76 வயது முதியவரைக் காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்

மருத்துவ வளர்ச்சி, மனிதனின் ஆயுளை அதிகரித்துவருகிறது. அதற்கு, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் உறுதுணையாக உள்ளது. ஹாங்காங்கில் 76 வயது முதியவரின் உயிரை ஆப்பிள் வாட்ச் காப்பாற்றியுள்ளது. 

இந்த விநோதச் சம்பவத்தின் விவரம் இதோ...

ஆப்பிள் வாட்ச்

ஹாங்காங்கில் வசித்துவருபவர், கேஸ்டன் டி அக்வினோ. 76 வயதான இவர், வைர வியாபாரம் செய்துவந்தார். இவர், கடந்த மாதம் அந்தப் பகுதியில் உள்ள தேவாலயத்துக்குச் சென்றுள்ளார். அப்போது, அவர் கையில் கட்டியிருந்த கடிகார அலாராம் அலறியது. வாட்சைப் பார்த்த, கேஸ்டன் டி அக்வினோவுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. `உங்களின் இதயத் துடிப்பு அதிகரித்துவருகிறது' என்ற தகவலை மெசேஜ் மூலம் எச்சரித்தது வாட்ச். உடனடியாக தேவாலயத்திலிருந்து வீட்டுக்குச் சென்றார். வீட்டில் உள்ளவர்களிடம் விவரத்தைச் சொல்ல, அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். 

மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்தபோது, கேஸ்டன் டி அக்வினோவுக்கு இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பது தெரியவந்தது. `சரியான நேரத்துக்கு அவரைக் கொண்டுவந்துவிட்டீர்கள். இல்லையென்றால், அவரை எங்களால் காப்பாற்றியிருக்க முடியாது' என்று மருத்துவர்கள் கூறினர். தொடர்ந்து, கேஸ்டன் டி அக்வினோவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். 

 சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர், வாட்ச்சால் உயிர் பிழைத்ததற்கு நன்றி தெரிவித்து, வாட்ச்சை தயாரித்த ஆப்பிள் நிறுவனத்தின்  சி.இ.ஓ-வுக்கு இ-மெயிலில் கடிதம் எழுதியுள்ளார். அதில் முழு விவரத்தையும் குறிப்பிட்டு நன்றியையும் தெரிவித்திருந்தார். 

"ஆப்பிள் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் ஆப்பிள் வாட்ச்சில் பல வசதிகள் உள்ளன. அலாரத்தில் தொடங்கி, மனிதனின் ஆயுளைக் காப்பாற்றும் ஆப்ஸ்கள் உள்ளன. இதயத் துடிப்பைத் துல்லியமாக இந்த வாட்ச்மூலம் கண்டறியும் வசதியுள்ளது. அதனால்தான், கேஸ்டன் டி அக்வினோவுக்கு இதயத் துடிப்பு அதிகரித்ததும் அவருக்கு வாட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வாட்ச்சில், உடலின் வெப்பநிலை, போன் அழைப்புகள், மியூசிக் எனப் பல வசதிகள் உள்ளன"  என்றனர் ஆப்பிள் நிறுவனத்தினர். 

கேஸ்டன் டி அக்வினோ கூறுகையில், "சம்பவத்தன்று, நான் நலமாகத்தான் இருந்தேன். என்னுடைய உடலில் எந்தவித மாற்றங்களும் எனக்குத் தெரியவில்லை. திடீரென நான் கட்டியிருந்த வாட்ச்மூலம் எனக்கு அலெர்ட் வந்ததும் அதிர்ச்சியடைந்தேன். உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றதால், நான் உயிர் பிழைத்துள்ளேன்" என்றார்.

Source: Ndtv