வெளியிடப்பட்ட நேரம்: 15:59 (14/05/2018)

கடைசி தொடர்பு:15:59 (14/05/2018)

`போலீஸை அழைக்க முடியாது' - எஸ்.வி.சேகர் குறித்த கேள்விக்கு பொன்.ராதா பதில்

விழுப்புரத்தில் வரும் 27-ம் தேதி பா.ஜ.க சார்பில் சமதர்ம சமுதாய மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கான பந்தற்கால் நடும் நிகழ்வு இன்று காலை விழுப்புரம்-ஜானகிபுரம் தேசிய நெடுஞ்சாலை அருகே நடைபெற்றது.

பொன்.ராதாகிருஷ்ணன்

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பட்டியலின மக்களைத் தமிழக அரசியல் கட்சிகள் தங்களின் சுய ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக்கொள்கின்றன. தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கும் அவர்களின் சமுதாய வளர்ச்சிக்கும் அந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எந்தப் பணியையும் செய்யவில்லை.

தமிழகத்தில் நிரந்தரமாகக் காவிரி நீர் வர வேண்டும் என்பதுதான் பா.ஜ.க-வின் நிலைப்பாடு. அதற்காகத்தான் நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம். ஏறக்குறைய 150 ஆண்டுகால இந்தப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டுமென்றால் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற மனநிலையைக் கொண்ட அரசு கர்நாடகத்தில் அமைய வேண்டும். அதில் பா.ஜ.க முன்னிலை வகிக்கும்.
50 ஆண்டுக்கால கர்நாடக காங்கிரஸ் ஆட்சியில் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை.

கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சி அமைந்தால் தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்கும். கர்நாடகாவில் காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமையும்போது நல்ல காலம் பிறக்கும். தமிழகத்தில் விவசாயிகள் இறக்கும் நிலை வந்தாலும் கர்நாடகக் காங்கிரஸ் அரசுத் தண்ணீர் திறக்காது. கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், கர்நாடகாவுக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கும் சனி பிடித்தது போலத்தான்” என்றார்.

`பா.ஜ.க-வை சேர்ந்த எஸ்.வி.சேகர் மீது தமிழகக் காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது. அவரைத் தேடி வருகிறது. இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் உங்களைச் சந்தித்ததாக ஒரு வீடியோ வெளியாகியிருக்கிறதே’ என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த பொன்.ராதாகிருஷ்ணன், “என்னை வந்து சந்திக்கவில்லை” என்றார்.

உடனே செய்தியாளர்கள், `ஆனால், வீடியோ ஆதாரம் வெளியாகியிருக்கிறதே’ என்று கோஷமிட்டனர்.

பொன். ராதாகிருஷ்ணன், ``இருக்கட்டும்ங்க... அவர் என்னை `வந்து’ சந்திக்கவில்லை. நான் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றேன். அங்கே அவர் ஏற்கெனவே இருந்தார். நாங்கள் பார்த்து தனியாகப் பேசிக்கொள்ளவில்லை. அப்படி எதாவது வீடியோ இருக்கிறதா” என்றார்.

`அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்’ என்று செய்தியாளர்கள் விடாமல் கேள்வி எழுப்பினர். அதற்கு பொன்.ராதா, “அவர்மீது கட்சி நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

`எஸ்.வி சேகர் மீது வழக்கு பதிவு செய்து அவரைத் தேடி வருவதாகக் காவல்துறை தெரிவித்து வருகிறது. இந்நிலையில், மத்திய அமைச்சரான நீங்கள் அவர் உங்களைச் சந்திக்கும்போது காவல்துறையிடம் தெரிவித்திருக்கலாமே’ என்று செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பினர். 

பொன். ராதாகிருஷ்ணன்: “அது என்னுடைய வேலை இல்லை. நான் உங்கள் வீட்டுக்கு ஒரு நிகழ்ச்சிக்கு வருகிறேன். உங்கள் வீட்டுக்கு போலீஸைக் கூப்பிடுவதா வேண்டாமா என்று முடிவெடுக்க வேண்டியது நீங்கள்’’ என்றார்.

இதைத் தொடர்ந்து, நடந்தவை பின்வருமாறு...

செய்தியாளர்கள்: ``உங்கள் பாதுகாவலர்களிடம் சொல்லி தமிழகக் காவல்துறையிடம் சொல்லியிருக்கலாமே?’’

பொன். ராதாகிருஷ்ணன்: ``என்னுடைய பாதுகாவலரின் பணி அது இல்லை. மங்களகரமான நிகழ்ச்சி நடக்கும்போது உங்கள் அனுமதி இல்லாமல் போலீஸை அழைக்க முடியாது.”

செய்தியாளர்கள்: ``நிகழ்ச்சி முடிந்து வெளியே வரும்போது காவல்துறைக்கு தெரிவித்திருக்கலாமே?’’

பொன்.ராதாகிருஷ்ணன்: “நான் உள்ளே போகும்போது அவர் வெளியே சென்றுகொண்டிருந்தார். அவரைத் துரத்திப் பிடியுங்கள் என்றா நான் சொல்ல முடியும்?’’

செய்தியாளர்கள்: ``மத்தியில் பா.ஜ.க, தமிழகத்தில் ரஜினி தலைமையிலான ஆட்சி என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்திருக்கிறாரே?’’

பொன்.ராதாகிருஷ்ணன்: “மரியாதைக்குரிய துக்ளக் ஆசிரியர் அவர்கள் தமிழகத்துக் எப்படியாவது விமோசனம் கிடைத்துவிட வேண்டுமென்று விரும்புகிறார். அதில் தப்பிருக்க முடியாது. அதேபோல ரஜினிகாந்த் அவர்கள் கட்சி ஆரம்பித்து அவரது கொள்கைகளை அறிவிக்கட்டும். அதன்பிறகு பா.ஜ.க தலைமை முடிவெடுக்கும்.”

செய்தியாளர்கள்: ``ஆனால் கட்சி ஆரம்பித்தாலும் பா.ஜ.க-வுடன் கூட்டணியே இல்லை என்று ரஜினி கூறியிருக்கிறாரே?’’

பொன்.ராதாகிருஷ்ணன்: “அது அவருடைய கருத்து. கட்சி ஆரம்பிக்கும்போதுதானே தெரியும். கட்சி ஆரம்பித்துவிட்டால் அதன்பின் ஒரு மனித கருத்தாக இருக்க முடியாது. அதேபோல பா.ஜ.க எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்க வேண்டும் என்று ஏங்கிக் கிடக்கவில்லை தமிழ்நாட்டில்.” 

நீங்க எப்படி பீல் பண்றீங்க