பைக் ரேஸில் ஈடுபட்டால் குண்டாஸ் -  கமிஷனருக்குச் சென்ற புகார் 

கமிஷனரிடம் புகார்

 'பைக் ரேஸில் ஈடுபடுவோர்மீது குண்டர்கள் பாதுகாப்பு தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வழக்கறிஞர் தமிழ்வேந்தன் மனு கொடுத்துள்ளார். 

சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் கொடுத்தார். 

 "சமீபகாலமாக சென்னையில் பைக் ரேஸில் ஈடுபடும் கலாசாரம் அதிகரித்துவருகிறது. பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள், நகரின் முக்கிய சாலைகளில் அதிவேகத்தில் செல்கின்றனர். இவர்கள் பயன்படுத்தும் பைக், அதிவேக சிசி கொண்டவையாகும். பைக் ரேஸால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்ப்பலியும் நடக்கிறது. மேலும் இந்த ரேஸ் பைக்கின் சைலன்சரில், காதைக் கிழிக்கும் வகையில் சத்தம் வருகிறது.கமிஷனரிடம் புகார் பைக் ரேஸில் ஈடுபவர்கள்மீது சாதாரணப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுகின்றன. பொது மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிக்கும் பொது மக்களின் உயிருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் ரேஸில் ஈடுபடுவர்கள்மீது குண்டர்கள் பாதுகாப்பு தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால், அவர்கள் சிறையிலிருந்து வெளிவர ஓராண்டு ஆகும். இதுபோன்ற சட்டங்கள் பாய்ந்தால், பைக் ரேஸில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். 

இதுகுறித்து வழக்கறிஞர் தமிழ்வேந்தன் கூறுகையில், "பொது மக்களின் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்றங்கள் செய்தால், குண்டாஸில் நடவடிக்கை எடுக்கலாம். ரேஷன் அரிசி கடத்தல், கள்ளச்சாரயம் விற்பவர்கள், பாலியல் தொழில் செய்பவர்கள் உள்ளிட்டவர்கள்மீது குண்டாஸில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு, உயிர்ப்பலிக்குக் காரணமான பைக் ரேஸில் ஈடுபடுவோர்கள் மீதும் குண்டர்கள் பாதுகாப்பு தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!