வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (14/05/2018)

கடைசி தொடர்பு:17:40 (14/05/2018)

மக்களின் 40 ஆண்டுக்கால கோரிக்கையை நிறைவேற்றிய தொல்லியல்துறை!

ரஞ்சன்குடி கோட்டையில் பூங்கா அமைக்கும் பணியைத் தொடங்கியிருக்கிறார்கள் தொல்லியல்துறை அதிகாரிகள். மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறியதால், சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

                           

பெரம்பலூர் மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுற்றுலாத் தலமான ரஞ்சன்குடி கோட்டையின் உட்புறம், 2 ஏக்கரில் பூங்கா அமைக்கும் பணிகளைத் தொல்லியல்துறை இன்று தொடங்கியது. இம்மாவட்டத்துக்கு வரலாற்று ரீதியாகப் பெருமைசேர்ப்பது, ரஞ்சன் குடியிலுள்ள கோட்டையாகும். இது, கி.பி 16-ம் நூற்றாண்டின் இறுதியில் தூங்கானை மறவன் என்ற குறுநில மன்னரால் கட்டப்பட்டது. இதில், இன்றளவும் பிரதான நுழைவுவாயில், அகழிகள், விதான மண்டபம், பீரங்கி மேடை, கொடிமேடை, தண்டனைக் கிணறு, வெடிமருந்துக் கிடங்கு, புறவழி சுரங்கப்பாதை, பாண்டியர் காலத்து மண்டபம், முகமதியர் காலத்து மசூதிகள், இயற்கைச் சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாத வகையில் துளைகளிடப்பட்ட சுற்றுச்சுவர், அந்தப்புற குளியலறைக் கிணறுகள் அனைத்தும் அழியாமல் இருக்கின்றன. 

                          

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, கோட்டைக்கான சீரமைப்புப் பணிகள், கோட்டையைக் காணவரும் சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர். இதன்படி, கடந்த 2016-ம் ஆண்டு இறுதியில், சென்னையிலுள்ள தொல்லியல்துறை தலைமைக் கண்காணிப்பாளர், ரஞ்சன்குடிக் கோட்டையைப் பார்வையிட்டுப் பரிந்துரைத்த பிறகே சிறப்புக் குழுவினர் கோட்டையின் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளத் திட்ட வரைவு தயாரித்து அனுப்பினர். அதன்படி, இரும்பு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கிய நிலையல், இன்று வரை நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்திய தொல்லியல் துறையின் பூங்கா அமைக்கும் பிரிவு கோட்டை வளாகத்திற்குள் 2 ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைக்கும் பணிகளை இன்று தொடங்குகிறது. 

                                  
இதுவரை கோட்டைக்குள் சிறு பள்ளத்தைக்கூட தோண்ட அனுமதிக்காத தொல்லியல் துறையினர், கடந்த சில தினங்களுக்கு முன்பு முதன்முறையாகக் கோட்டைக்குள் பூங்கா ஏற்படுத்துவதற்காக ஆழ்துளைக் கிணறு அமைத்தது. ஆனால் அதில் தண்ணீர் வராததால், கோட்டை வளாகத்தில் செல்லியம்மன் கோயிலருகே பெரிய அளவிலான ஆழ்துளைக் கிணற்றை அமைத்துள்ளது. இதன்படி, பூங்கா அமைக்கும் பணிகள் துவங்கும் நிலையில், விரைவில் சுற்றுலாப் பயணிகள் அவற்றைக் காணலாம். தொல்லியல் துறையின் இந்தப் பணிகளுக்கு, பெரம்பலூர் மாவட்ட சுற்றுலா ஆர்வலர்கள், பொதுமக்கள் மிகுந்த வரவேற்பு மற்றும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.