`ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை போராட்டம் ஓயாது!’ - தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

"தூத்துக்குடியில் நிலம், நீர், காற்று ஆகியவற்றில் மாசு ஏற்படுத்தி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை எங்கள் போராட்டம் தொடரும். தமிழகத்தைப் பாலைவனமாக்கும் எந்தத் திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம்" என வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆட்சியர் அலுவகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். 

தூத்துக்குடி போராட்டம்

 

தமிழகத்தைப் பாலைவனமாக்கும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். செய்தியாளர்களிடம் பேசிய அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் சந்தானகுமார், "தமிழகத்தில் இயற்கை வளங்கள் அனைத்தையும் உறிஞ்சி பாலைவனமாக்கத் துடிக்கிறது மத்திய அரசு. இதற்கு மாநில அரசும் துணைபோகிறது. 

மீத்தேன், நியூட்ரினோ எனத் தமிழகம் முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் இயற்கை வளங்கள் சுரண்டலுக்கு எதிரான மக்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது. காவிரி மேலாண்மை அமைத்திட உச்ச நீதிமன்றம் உரிய கால அவகாசம் அளித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடாமல் தமிழகத்தை வஞ்சித்துள்ளது மத்திய அரசு. மாநில அரசும் மத்திய அரசுக்கு சரியான அழுத்தம் கொடுக்கவில்லை. மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு தலையாட்டி செயல்பட்டு வருகிறது மாநில அரசு. தூத்துக்குடியில் கடந்த
20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலை வெளியிடும் அளவுக்கு அதிகமான புகையால், மூச்சுத்திணறல், நுரையீரல் சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல பிரச்னைகளால் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிப்பு அடைந்துள்ளனர். இதன் கழிவால் நிலம் மலடாகிவிட்டது.

 நிலத்தடி நீரிலும் நஞ்சு கலந்துவிட்டது. உப்பாற்று ஓடைப்பகுதி, அரசுப் புறம்போக்கு நிலங்கள் ஆகிய பகுதிகளில் இதன் கழிவுகளும் கொட்டப்பட்டுள்ளன. இது தடுக்கப்பட வேண்டும். இந்த ஆலையால் ஏற்படும் பாதிப்புகளால் 22 கிராம மக்கள் பல நாள்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும் பாதிப்புகளை உணர்ந்தும் அரசு இந்த ஆலையை மூடிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆலையின் விரிவாக்கத்துக்கான அனுமதியையும் ரத்து செய்ய வேண்டும். இந்த ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும்.  அதுவரை மக்களின் தன்னெழுச்சியான போராட்டத்துடன் நாங்களும் போராட்டம் நடத்துவோம். ஸ்டெர்லைட் ஆலை மட்டுமல்ல மக்களுக்கும் நிலத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு திட்டத்தையும் தமிழகத்தில் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம். தமிழகத்தைப் பாலைவனமாக்கத் துடிக்கும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து  மாநிலம் முழுவதும் முற்றுகைப் போராட்டம் நடத்துகிறோம்" என்றார். முற்றுகைப் போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஈடுபட்ட 90-க்கும் மேற்ப்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!