வெளியிடப்பட்ட நேரம்: 16:38 (14/05/2018)

கடைசி தொடர்பு:16:38 (14/05/2018)

``படிச்சது இன்ஜினீயரிங்... செய்வது வெட்டிவேர் விவசாயம்!” - ஆச்சர்யக் கதையும் வியாபார வாய்ப்பும்

மார்க்கெட்டில் வெட்டிவேர் தேவை அதிகம் உள்ளது. எங்களுக்குத் தற்பொழுது 200 டன் தேவைப்படுகிறது. ஆனால், அந்த அளவுக்கு நம் பகுதியில் உற்பத்தி இல்லை. இதனால் விவசாயிகளுக்கு வெட்டிவேர் சாகுபடி குறித்து ஒரு விழிப்புஉணர்வை ஏற்படுத்தவே இந்தக் கருத்தரங்கை எற்பாடு செய்துள்ளோம்.

``படிச்சது இன்ஜினீயரிங்... செய்வது வெட்டிவேர் விவசாயம்!” - ஆச்சர்யக் கதையும் வியாபார வாய்ப்பும்

கடலூர் சி.கே பொறியியல் கல்லூரியில் இந்திய வெட்டிவேர் நெட்வொர்க் மற்றும் புதுச்சேரி வெட்டிவேர் நெட்வொர்க் இணைந்து நடத்திய வெட்டிவேர் சாகுபடி குறித்த கருத்தரங்கம் நடந்தது. இந்தக் கருத்தரங்கில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சுமார் 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

வெட்டிவேர் கருத்தரங்கு

இந்தக் கருத்தரங்கில் லாபகரமாக வெட்டிவேர் சாகுபடி செய்யும் முறை, அதனை விற்பனை செய்தல், மதிப்புக் கூட்டல், அரசு உதவி போன்ற பல்வேறு தலைப்புகளில் தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருந்த வெட்டிவேர் சாகுபடி நிபுணர்கள் விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினார்கள். தொடர்ந்து வெட்டிவேர் சாகுபடிக்குப் புதிய ரகங்கள், மகசூல் பெருகிட புதுமையான அணுகுமுறைகள் மற்றும் வெட்டிவேரில் மருந்து கூறுகளைப் பிரித்து எடுக்கும் அணுகுமுறைகள் மேலும் வெட்டிவேர் மூலமாகக் கைவினைப் பொருள்கள் வாய்ப்பு, சாகுபடி குறித்து முன்னோடி விவசாயிகள் கருத்துரை வழங்கினார்கள். முன்னதாக கடலூர் சி.கே குழும அசோக்குமார் குத்துவிளக்கு ஏற்றி கருத்தரங்கைத் தொடங்கிவைத்தார். நபார்டு வங்கி முன்னாள் தலைமைக் காசாளர் நாகூர்அலி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். தொடர்ந்து கடலூர் வெட்டிவேர் திறன்மேம்பாட்டு மையம் திறக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர்கள் பிரசன்னகுமார், இன்பரசன், செந்தூர்வேலன், வேலுமணி ஆகியோர் கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். 

கடலூர்

இது குறித்து மருதமலை டிரேடர்ஸ் நிறுவனர் பிரசன்னகுமார் கூறும்போது ``நான் பி.இ மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்தேன். ஆனால், எனக்கு ஒரு தொழில் முனைவோராக ஆக வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தது. இந்நிலையில் சிகே குழும அசோக்குமார் சார் என்னிடம் வெட்டிவேர் சாகுபடி குறித்து `உலகில் 10 சதவிகிதம் மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால், 90 சதவிகிதம் தேவை உள்ளது' எனக் கூறினார். அப்பொழுது `இன்ஜினீயரிங் படித்துவிட்டு விவசாயமா' என எனக்குத் தாழ்வு மனப்பான்மை இருந்தது. அசோக்குமார் சார் அவர்கள் அதனைப் போக்கி 2015 ம் ஆண்டு சிறிய முதலீட்டில் வெட்டிவேர் மற்றும் வெட்டிவேர் கைவினைப் பொருள்களை வாங்கி விற்பனையை தொடங்கி வைத்தார். மார்கெட்டில் நல்ல தேவை இருந்ததால் நானும் என்னைப் போன்ற வேலையில்லாத இளைஞர்களும் இணைந்து கடலூர் அருகே கடற்கரையோர கிராமங்களில் பயனில்லாத உவர் நிலங்களை ரூ 5,000, 10,000 க்குக் குத்தகைக்கு எடுத்து வெட்டிவேர் பயிர்செய்தோம். அதன் பின்பு மருதமலை டிரேடர்ஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கி நாங்கள் பயிர் செய்தது போக விவசாயிகளிடம் வாங்கி ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு விற்பனை செய்து வந்தோம். மார்க்கெட்டில் வெட்டிவேர் தேவை அதிகம் உள்ளது. எங்களுக்குத் தற்பொழுது 200 டன் தேவைப்படுகிறது. ஆனால், அந்த அளவுக்கு நம்பகுதியில் உற்பத்தி இல்லை. இதனால் விவசாயிகளுக்கு வெட்டிவேர் சாகுபடி குறித்து ஒரு விழிப்புஉணர்வை ஏற்படுத்தவே இந்தக் கருத்தரங்கை எற்பாடு செய்துள்ளோம். நாங்கள் விவசாயிகளுக்கு நாற்று இலவசமாகத் தந்து அவர்களுடன் ஒரு வருடம் பயணித்து வெட்டிவேர் உற்பத்தி தொழில்நுட்பம் அனைத்தையும் சொல்லித் தந்து நாங்களே உற்பத்தியை வாங்கிக் கொள்கிறோம். அதற்கு அக்ரிமென்ட் கூட போட்டுவிடுகிறோம். ஒரு விவசாயி ஒரு ஏக்கர் வெட்டிவேர் பயிர் செய்ய ரூ.70,000 செலவு செய்தால் ரூ 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை லாபம் பெற முடியும் என்பதை உறுதியாகக் கூற முடியும்" என்கிறார் நம்பிக்கையாக. 

படித்தது மெக்கானிக்கல் இன்ஜினீயரிங். ஆனால் பார்ப்பது விவசாயம். இந்த இளைஞர்களின் நம்பிக்கை பிரமிப்பாக உள்ளது. 


டிரெண்டிங் @ விகடன்