வெளியிடப்பட்ட நேரம்: 16:54 (14/05/2018)

கடைசி தொடர்பு:16:54 (14/05/2018)

`குஷ்புவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ராகுல்?!' - தகிக்கும் திருநாவுக்கரசர் ஆதரவாளர்கள்

`குஷ்புவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ராகுல்?!' - தகிக்கும் திருநாவுக்கரசர் ஆதரவாளர்கள்

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை திருமாவளவன் சந்தித்துப் பேசியிருப்பது அக்கட்சியின் ஒரு பிரிவினரிடையே கடும் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் அடுத்தகட்டமாக, `மாநிலத் தலைவரை மாற்ற வேண்டும்' என்ற கோரிக்கையோடு டெல்லியில் அவர்கள் முகாமிட்டுள்ளனர். `மாநிலத் தலைமைக்கு குஷ்பு பெயரும் பரிந்துரைப் பட்டியலில் இருக்கிறது' என்கின்றனர் சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில். 

திருநாவுக்கரசர்

கர்நாடக சட்டப் பேரவை தேர்தல் நிறைவடைந்ததையடுத்து, நாடாளுமன்றத் தேர்தலுக்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டன. மம்தா பானர்ஜியின் மூன்றாவது அணி முயற்சிக்குத் தி.மு.க செயல் தலைவர் வாழ்த்து தெரிவித்ததும், அதன் நீட்சியாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், கோபாலபுரம் வந்ததையும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைமை உன்னிப்பாகக் கவனித்து வந்தது. இந்தக் காட்சிகள் அரங்கேறிய ஓரிரு நாள்களில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ராகுல்காந்தியைச் சந்தித்துப் பேசினார். `மூன்றாவது அணி முயற்சி வலுப்பெற்றால், அது பா.ஜ.கவின் வெற்றிக்கு வழிவகுத்துவிடும்' என அரசியல் ஆய்வாளர்கள் கூறி வந்த நிலையில், ராகுல்-திருமா சந்திப்பு, தி.மு.கவுக்குச் சில விஷயங்களை உணர்த்தத் தொடங்கியது. தி.மு.க ஆதரவு மனநிலையோடு இருக்கும் காங்கிரஸ் புள்ளிகளான பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டவர்கள், இந்தச் சந்திப்பை நட்புரீதியாகப் பார்த்தனர். `வி.சி.க மாநாட்டில் பங்கேற்க ராகுலுக்கு மட்டுமல்ல, தி.மு.கவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது' எனவும் பேசி வந்தனர் வி.சி.க நிர்வாகிகள். `தொகுதிப் பங்கீட்டில் அதிக இடங்களைப் பேரம் பேசுவதற்கு வசதியாக, திருமாவுடனான சந்திப்பை ராகுல் பயன்படுத்திக் கொண்டார்' எனக் காங்கிரஸ் தரப்பில் தகவல் பரவியது. இந்நிலையில், `மாநிலத் தலைவர் திருநாவுக்கரசரை மாற்ற வேண்டும்' என்ற கோரிக்கையோடு டெல்லியில் முகாமிட்டுள்ளனர் காங்கிரஸ் தலைவர்கள் சிலர். `தி.மு.கவின் நிர்பந்தம்தான் இதற்குக் காரணம்' என்கின்றனர் திருநாவுக்கரசர் ஆதரவாளர்கள். 

குஷ்புகாங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். ``மாநிலத் தலைவரை மாற்ற வேண்டும் என்ற விஷயத்தில் காங்கிரஸில் உள்ள அனைத்துக் குழுக்களும் ஒன்றிணைந்துவிட்டன. அகில இந்திய செய்தித் தொடர்பாளராக இருக்கும் குஷ்புவுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறார் ராகுல்காந்தி. `நீங்கள் விரும்பினால் மாநிலத் தலைமையை ஏற்று நடத்தலாம்' என கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார். இதை திருநாவுக்கரசர் தரப்பினர் எதிர்பார்க்கவில்லை. இதுகுறித்து காங்கிரஸ் தலைமைக்கும் அவர்கள் சில விஷயங்களைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

அதாவது, `தி.மு.கவுக்கு பயந்து மாநிலத் தலைமையை மாற்றினால், அது காங்கிரஸை பலவீனப்படுத்துவதாக மாறிவிடும். காங்கிரஸ் கட்சிக்கு மன்னார்குடி குடும்பத்தின் மூலமாக, பேரம் பேசும் சக்தியை திருநாவுக்கரசர்தான் உருவாக்கிக் கொடுத்தார். இல்லாவிட்டால், அப்போது நடப்பதாக இருந்த உள்ளாட்சித் தேர்தலில் 2 சதவிகித இடங்களைக்கூட தி.மு.க நமக்கு அளித்திருக்காது. இந்தச் சூழ்நிலையில், திருநாவுக்கரசரை மாற்றினால், அது தி.மு.கவின் உருட்டல் மிரட்டல்களுக்கு பயந்தது போலாகிவிடும். இது காங்கிரஸின் தோல்வியாகவும் தி.மு.கவின் வெற்றியாகவும் பார்க்கப்படும்' எனத் தெரிவித்துள்ளனர். 

அதேநேரம், திருநாவுக்கரசருக்கு எதிராகக் கொடி உயர்த்தும் மற்ற தலைவர்களிடம் ஒருமித்த கருத்து இல்லை. பல்வேறு கோஷ்டிகளாகப் பிரிந்திருக்கிறார்கள். ப.சிதம்பரத்தைத் தலைமைப் பொறுப்புக்குக் கொண்டு வர நினைக்கிறார் ராகுல். `தமிழ்நாடு காங்கிரஸ் எப்படியெல்லாம் இருக்க வேண்டும்?' எனக் கருத்துக் கூறும் சிதம்பரம், மாநிலத் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்குத் தயங்குகிறார். `அப்படியானால், தி.மு.க சொல்லும் அளவுக்குத்தான் தமிழகத்தில் காங்கிரஸ் இருக்கிறதா?' என்ற கேள்வியும் ராகுல் மத்தியில் எழுந்துள்ளது. மாநிலத் தலைவரை மாற்ற வேண்டும் என்ற சங்கை அனைவரும் ஊதத் தொடங்கிவிட்டார்கள். முடிவு ராகுல் கைகளில் இருக்கிறது" என்றார் விரிவாக. 

``மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்ட காலத்திலிருந்தே, அ.தி.மு.க ஆதரவு மனநிலையில்தான் திருநாவுக்கரசர் செயல்பட்டு வருகிறார். அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட காலத்தில், ராகுல்காந்தியை மருத்துவமனைக்கு வரவழைத்தார். தொடர்ந்து சசிகலா குடும்பத்துக்கு ஆதரவாகவே செயல்பட்டுவந்தார். நடராஜனுடன் அடிக்கடி சந்திப்புகளை நிகழ்த்திக் கொண்டிருந்தார். தற்போது காங்கிரஸ் அணிக்குள் தினகரனைக் கொண்டு வரும் வேலைகளையும் செய்து வருவதாகத் தகவல் வெளியானது. இந்தக் கோபத்தில்தான், `திருநாவுக்கரசரை மாற்ற வேண்டும்' எனக் காங்கிரஸ் நிர்வாகிகள் மூலமாக அழுத்தம் கொடுக்கிறது தி.மு.க" என்கின்றனர் சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில்.


டிரெண்டிங் @ விகடன்