கோடிகளில் புரளும் தேனி சார் பதிவாளர்.! – குற்றச்சாட்டுகளைக் குவிக்கும் மக்கள்.!

கோடிகளில் புரளும் தேனி சார் பதிவாளர்.! – குற்றச்சாட்டுகளைக் குவிக்கும் மக்கள்.!

கோடிகளில் புரளும் தேனி சார் பதிவாளர்.! – குற்றச்சாட்டுகளைக் குவிக்கும் மக்கள்.!

`` `நீங்க ஏன் இந்த மதிப்பைப் போட்டுக்கொண்டு வந்திருக்கிறீர்கள்? இந்த மதிப்பில் பத்திரம் பதிய முடியாது. அந்த இடத்துக்கான அரசு மதிப்பை போடுங்கள்…' என்று அவர் சொன்னதும் நகர்ந்தேன். உடனே என்னை அழைத்து, `சரி… சரி… எனக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பணம் கொடுங்க… உங்களுக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம். நல்ல மதிப்பில் முடித்துக்கொள்ளலாம்.' என்றார் தேனி சார்பதிவாளர் அஞ்சனகுமார்’’ என்று நம்மிடம் பேச ஆரம்பித்தார் தேனி பங்களாமேடு பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன்.

சார் பதிவாளர் அலுவலகம்

``சார்பதிவாளர் பணம் கேட்டு நான் தர மறுத்துவிட்டேன். என்னை மிரட்டிப் பணம் வாங்கிக்கொண்டார். இரண்டு வருடத்துக்கு முன் ஊஞ்சாம்பட்டியில் இருக்கும் என்னுடைய ஒரு ஏக்கர் 80 சென்ட் புஞ்சை நிலத்தை கிரயம் பெற்று பதிவுக்குச் சென்றபோது நடந்ததுதான் இது. அதே நிலத்தில், 20 சென்ட் நிலத்தை கடந்த மாதம் வேறு ஒருவருக்கு விற்பனை செய்து பத்திரம் பதியச் சென்றேன். அதேபோல பேசி, 3 லட்சம் ரூபாய் கேட்டார். தர மறுத்தேன். மீண்டும் மிரட்டினார். அவசர பணத்தேவை கருதியே நிலத்தை விற்பனை செய்கிறேன் என்று எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. மிரட்டிப் பணம் பறித்துவிட்டார். எனக்கு மட்டும்தான் இப்படிச் செய்கிறாரா... என்று விசாரித்தபோதுதான் அதிர்ச்சியடைந்துவிட்டேன். பதிவுக்கு வரும் அனைவருக்கும் ஒரு தொகையை நிர்ணயித்து வசூல் செய்கிறார். தினம் 20 லட்சத்துக்குக் குறையாமல் பணம் வசூலிக்கும் சார்பதிவாளரின் ஒரு வார வசூல் கோடியைத் தாண்டும்! இவருக்கு இவ்வளவு தொகை சொன்னால், அவரால் கொடுக்க முடியுமா? முடியாதா என்று கணிப்பதற்கு இருவரைக் கூடவே வைத்திருக்கிறார். அவர்கள் முன்னாள் குற்றவாளிகள். இன்னாள் சார்பதிவாளரின் உதவியாளர்கள்! இவரின் அராஜகத்தை கலெக்டருக்கு மனுவாக எழுதிக்கொடுத்தேன். இன்றுவரை நடவடிக்கை இல்லை.’’ என்றார் ஆதங்கத்தோடு.

பாஸ்கரன்

``ஏதோ அவரசத் தேவையைக் கருத்தில்கொண்டுதான் நிலத்தை விற்பனை செய்வார்கள். அதனைப் பயன்படுத்திப் பணம் கேட்டு மிரட்டுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பணம் கொடுக்கவில்லை என்றால், `உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்துகொள், தேனி மாவட்டத்தில் வேறு எங்கும் உன்னால் பத்திரம் பதிய முடியாது. திரும்பி என்னிடம்தான் வர வேண்டும்' என்று சொல்லி பகிரங்கமாக மிரட்டுகிறார். ஏதுமறியாத பொது ஜனங்களுக்கு என்ன தெரியும்?

எதுக்கு இவருடன் வம்பு வைத்துக்கொள்வது என்று அவர் கேட்கும் பணத்தைக் கொடுத்துவிட்டு பத்திரம் பதிந்துகொண்டு செல்கிறார்கள். இவரின் அதிகார அத்துமீறல்களைப் பார்த்து பயந்து பலரும் பத்திரம் பதிய வருவதில்லை. நிலப்பத்திரத்தை அடகு வைத்துப் பணம் வாங்கிக்கொண்டு செல்கிறார்கள். இவரின் செயல்களை விளக்கி கடந்த மாதம் 2 ம் தேதி கலெக்டரை நேரில் சந்தித்துப் புகார் மனு கொடுத்தோம். இன்றுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.’’ என்கிறார் தேனி மாவட்ட ரியல் எஸ்டேட் மற்றும் புரோமோட்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் வீரராஜ்.

மக்களை மிரட்டிப் பணம் பறிக்கும் செயல்களில் மட்டும்தான் அஞ்சனகுமார் பெயர் எடுத்தவர் என்றால், சார்பதிவாளர் அலுவலகத்துக்குத் தங்களது திருமணத்தைப் பதிய வருபவர்களுக்கு அவர் கொடுக்கும் இன்னல்கள் ஏராளம்...

மதியவன்

``நானும் ரம்யாவும் கல்லூரிக் காலங்களிலிருந்து காதலித்துவந்தோம். திருமணம் செய்துகொள்ளலாம் என்று எண்ணினோம். சுயமரியாதை திருமணம் செய்துகொள்வதே எங்களது ஆசை. அதன்படி கடந்த பிப்ரவரி 18- ம் தேதி கோவையில் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் சுயமரியாதை திருமணம் செய்துகொண்டோம். அதன் வரவேற்பு மார்ச் 11- ம் தேதி தேனியில் நடந்தது. அதில் தோழர் தியாகு உட்பட பலர் கலந்துகொண்டனர். எங்களது சுயமரியாதை திருமணத்தைப் பதிவு செய்ய தேனி சார்பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்றேன். சார்பதிவாளர் அஞ்சனகுமார் எங்களை பலமணி நேரம் காக்க வைத்து கடைசியில், `முதல் திருமணச் சான்றிதழ் இணைக்கவில்லை. நீங்கள் திருமணம் செய்துகொண்ட இடம் தனியார் இடம். எனவே, வீரபாண்டி கோவிலுக்குச் சென்று திருமணம் செய்துகொண்டு வாங்க.... பிறகு பதிந்து தருகிறேன்' என்றார்.

அஞ்சனகுமார்

எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் முதல் திருமணச் சான்றிதழ் இணைக்க வேண்டும். எங்களுக்கு 32 வயதுதான் ஆகிறது. அதே போல், நாங்கள் சுயமரியாதை திருமணம் செய்துகொண்டதைக் கோவையில் இயங்கும் கலப்புத்திருமணம் புரிந்தோர் நலச்சங்கம் பதிவு செய்து சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் இதுவரை 5000-க்கும் மேற்பட்ட சாதி மறுப்புத் திருமணங்களை நடத்தியிருக்கிறார்கள். அப்படியிருக்க அவர்களது சான்றிதழையும் நிராகரித்துவிட்டுக் கோவிலுக்குச் சென்று தாலி கட்டிக்கொண்டு வாருங்கள் என்கிறார். சுயமரியாதை (சீர்திருத்தச் சட்டம்) திருமணச்சட்டம் பிரிவு 7(A)ன் படி, சாஸ்திர சம்பிரதாயங்கள் ஏதும் இல்லாமல், நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில், சுயமரியாதை திருமண உறுதிமொழி எடுத்துக்கொண்டு இருவரும் மாலை மாற்றிக்கொண்டாலே போதும். இந்த அடிப்படை விதிகூடத் தெரியாதவராக இருக்கிறார் சார்பதிவாளர் அஞ்சனகுமார்.வீரராஜ் எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் கேட்கவில்லை. திருமணம் பதிவு செய்ய வரும் அனைவருக்கும் இதே மாதிரி நிறைய இன்னல்களைக் கொடுத்துவருகிறார். இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்திருக்கிறோம். திராவிட ஆட்சியில்தான் சுயமரியாதை திருமணத்துக்குச் சட்ட அங்கீகாரம் கிடைத்தது. அதே திராவிட ஆட்சியில்தான் சுயமரியாதை திருமணச் சட்டமே கேள்விக்குள்ளாகியுள்ளது!’’ என்று கொதிப்போடு பேசினார் மதியவன்.

இது தொடர்பாக தேனி சார்பதிவாளர் அஞ்சனகுமாரைச் சந்திக்க நேரில் சென்றோம். ``உங்கள் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்றால் என் அருகில் ஒருவர் இருக்க வேண்டும்.

அவர் வெளியூர் சென்றிருக்கிறார். அடுத்த வாரம் வாங்க… அவர் வந்துவிடுவார். பதில் சொல்கிறேன்.!’’ என்றார். ``யார் அவர்? பதிவுத்துறையில் பதில் சொல்ல யாரேனும் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கிறார்களா?'' என்று நாம் கேட்டோம். தனது இருக்கையிலிருந்து எழுந்து சென்றுவிட்டார்.

மக்களின் குற்றச்சாட்டுகள் குறித்து இதுவரை என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள் என்ற கேள்வியோடு, தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவைச் சந்திக்கச் சென்றோம். ``மேடம் மீட்டிங்கில் இருக்கிறார்’’ என்றார்கள். இதே பதிலைத்தான் மாலை 7 மணி வரை சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அதிகார உச்சத்தில் இருக்கும் சிலர், மக்களை வதைக்கும் சூழலில், ஏசி அறையில் அமர்ந்துகொண்டு அப்படி என்னதான் ஆலோசனை செய்துகொண்டிருக்கிறார் கலெக்டர் என்று யோசித்தபடியே திரும்பினோம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!