வெளியிடப்பட்ட நேரம்: 18:24 (14/05/2018)

கடைசி தொடர்பு:18:24 (14/05/2018)

`உயிரிழப்பு, குண்டு வெடிப்பு, வாக்குப்பெட்டிகள் எரிப்பு' - மேற்கு வங்கத் தேர்தலில் பதற்றம்

மேற்கு வங்கத்தில் இன்று நடைபெற்றுவரும் பஞ்சாயத்துத் தேர்தலில் இரு கட்சிகளுக்கு இடையே கலவரம் வெடித்ததால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

கலவரம்

மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்துத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டத்திலிருந்து பல குழப்பங்கள் நிலவி வருகின்றன. இதனால் வன்முறைகளும் வெடித்தன. முன்னதாக மே மாத தொடக்கத்திலேயே மேற்கு வங்க பஞ்சாயத்துத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க-வுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியதால் தேர்தல் தேதி ஒத்திவைக்கப்பட்டு, மே 14-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன் பின் வேட்பு மனுத்தாக்கலிலும் சிக்கல் ஏற்பட்டு வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து இன்று பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது. 

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு 9 மணிவரை அமைதியாக  நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதன் பின் பா.ஜ.க-வுக்கும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வடக்கு பர்கானாஸ், கூக் பெஹர், பர்த்வான் போன்ற மாவட்டங்களில் வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்தது. பங்கர் வாக்குச்சாவடிக்கு அருகில் நின்றிருந்த தொலைக்காட்சி நிறுவன வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டது. சுக்டபரி வாக்குச்சாவடியில் சிறிய அளவிலான பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும், இந்தத் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும் காயமடைந்தார். 

அலிப்பூர்துவர் வாக்குச்சாவடிக்கு, வாக்களிக்க வந்த மக்களை உள்ளே அனுமதிக்காமல் பா.ஜ.க மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியச் சேர்ந்தவர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர். சில இடங்களில் வாக்குச்சாவடிகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. மேலும், சில இடங்களில் வாக்குப் பெட்டிகள் சூறையாடப்பட்டுத் தீ வைப்பது, குளத்தில் தூக்கி வீசுவது போன்ற சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. மாநிலம் முழுவதும் நடைபெற்ற கலவரத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மேற்கு வங்க மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவுகிறது. கலவரத்தில் ஈடுபடுபவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.