வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (14/05/2018)

கடைசி தொடர்பு:18:30 (14/05/2018)

`பிரதமர் மோடியைக் கொஞ்சம் எச்சரித்து வையுங்கள்' - மன்மோகன் சிங் கடிதம்

`பிரதமர் நரேந்திர மோடி அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து பேசி வருகிறார், அவரைக் கொஞ்சம் எச்சரித்து வையுங்கள்’ என்று குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார் மன்மோகன் சிங். 

மன்மோகன் சிங்

கர்நாடக சட்டசபைத் தேர்தல் கடந்த 12-ம் தேதி நடந்தது. தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே பா.ஜ.க தலைவர்கள் கர்நாடகாவில் முகாமிட்டு பிரசார வேலைகளைக் கவனித்து வந்தனர். பிரதமர் மோடி ஐந்து நாளில் 15-க்கும் மேற்பட்ட பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்றார்.  பிரசாரத்தின்போது பிரதமர் மோடி காங்கிரஸ் தலைவர்களைத் தரக்குறைவாகப் பேசியதாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திடம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட காங்கிரஸ் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். 

அந்தக் கடிதத்தில், `கர்நாடகத் தேர்தல் பிரசாரத்தின்போது, காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களைத் தகாத வார்த்தைகளாலும் அச்சுறுத்தும் வகையிலும் மிரட்டல் விடுக்கும் தொனியிலும் பிரதமர் மோடி பேசியுள்ளார். இவ்வாறு பேசுவது நாட்டின் பிரதமருக்கு அழகல்ல. அவரைக் கொஞ்சம் எச்சரித்து வையுங்கள்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  

கர்நாடக ஹூப்ளியில் கடந்த 6-ம் தேதி நடந்த பிரசாரத்தில் பேசிய பிரதமர், `காங்கிரஸ் தலைவர்கள் காது கொடுத்துக் கேளுங்கள். உங்களுக்குரிய எல்லை மீறி நடந்தால், நான் மோடி, அதன்பின் கடும் விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும் என்று பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.