தொடரும் போராட்டம்! - விசைத்தறித் தொழிலாளர்கள் விவகாரத்தில் முத்தரப்புப் பேச்சுவார்த்தை தோல்வி

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் விசைத்தறித் தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி 15-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினார்கள். விசைத்தறி உரிமையாளர்கள், தொழிலாளர்கள், மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் விசைத்தறித் தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி 15-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினார்கள். விசைத்தறி உரிமையாளர்கள், தொழிலாளர்கள், மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. 

விசைத்தறி தொழிலாளர் பேச்சுவார்த்தை

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் 5000-க்கும் அதிகமான விசைத்தறிக் கூடங்கள் உள்ளன. இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 20,000-க்கும் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த பிப்ரவரி 28-ம் தேதியுடன் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து தங்களுக்கு 60 சதவிகித கூலி உயர்வு, தேசிய விடுமுறை சம்பளமாக 300 ரூபாய் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்தப் போராட்டம் 15-வது நாளாக தொடர்கிறது. அதனால் 7 கோடி ரூபாய் மதிப்பில் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், நெல்லை மாவட்ட தொழிலாளர் நலத்துறை சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, தொழிலாளர் நல அலுவலகத்தில் இன்று இரண்டாம் கட்டமாக முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் அப்துல்காதர் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், விசைத்தறி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தை தொடங்கியதும் விசைத்தறி உரிமையாளர்கள் 2015-2016–ம் ஆண்டு அடிப்படை ஊதியத்தை மையமாக வைத்து ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையைத் தொடங்கினார்கள். அதற்கு தொழிலாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததுடன் தங்களுக்கு 60 சதவிகித ஊதிய உயர்வு வேண்டும் எனத் தெரிவித்ததால் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது. 

அதனால், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் அப்துல்காதர், அரசு நிர்ணையித்துள்ள அடிப்படை ஊதியத்தை மையமாக வைத்து ஊதிய உயர்வு செய்யலாம் எனத் தெரிவித்தார். அதற்கு விசைத்தறி உரிமையாளர்கள் ஒத்துக்கொள்ளாததால் பேச்சுவார்தை தோல்வியில் முடிவடைந்தது. வரும் 18-ம் தேதி மீண்டும் முத்தரப்புப் பேச்சுவாத்தை நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் போராட்டம் தொடரும் என்றும் 16-ம் தேதி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!