வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (14/05/2018)

கடைசி தொடர்பு:20:00 (14/05/2018)

சுகாதாரமற்ற கிணற்றிலிருந்து குடிநீர்! வயிற்றுப்போக்கால் அவதிப்படும் கிராம மக்கள்

சுகாதாரமற்ற கிணற்றிலிருந்து விநியோகம் செய்யப்படும் தண்ணீர் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு ஏற்பட்ட வயிற்றுப்போக்கால் அப்பகுதியினர் பீதியில் உறைந்திருக்கிறார்கள். சுகாதாரமற்ற கிணற்றிலிருந்து உபயோகிக்கும் தண்ணீர்தான் இதற்கு காரணம் என்பதால் அப்பகுதி மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.

சுகாதாரமற்ற தண்ணீர், வயிற்று போக்கு

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்தில் இருக்கிறது வளர்குன்றம் கிராமம். கடந்த ஒரு வாரமாகவே இந்தக் கிராமத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என வயிற்றுப்போக்கால் மக்கள் அவதியுற்றிருக்கிறார்கள். அக்னி நட்சத்திர வெயில் ஒருபக்கம், அடிக்கடி தண்ணீர் பாட்டிலைத் தூக்கித் திரியும் நிலை இன்னொரு பக்கம் என அவர்களின் கொடுமை சொல்லி மாளாது. 

வளர்குன்றம் கிராமத்தில் இருவேறு பகுதியினருக்குப் பொதுவான கிணறு ஒன்று உள்ளது. இந்தக் கிணற்றிலிருந்து அப்பகுதி தண்ணீர் தொட்டிகளுக்குத் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்தத் தண்ணீரை உபயோகிக்கும் அந்தக் கிராமத்தில் உள்ள எல்லோருக்கும் கடந்த சில தினங்களாகவே மாறிமாறி வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. சாதாரண வயிற்றுப்போக்குதானே எனப் பெரும்பாலானோர் இருந்துவிட்டார்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் தங்களின் நிலையைச் சொல்லும்போதுதான் ஊரில் பெரும்பகுதியினர் இதுபோல் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் எனத் தெரியவந்தது. இதனால், அருகில் உள்ள சிறுகுன்றம் ஆரம்ப சுகாதார மையத்தை மக்கள் சிகிச்சைக்காக அணுகியிருக்கிறார்கள். அங்கு மருத்துவர்கள் இல்லை எனப் பலர் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வயிற்றுப் போக்கால் நீண்ட தூரம் பயணிக்க முடியாத காரணத்தால் பலர் வீட்டிலேயே இருந்துவிட்டனர். அதில் சிலர் சுயமருத்துவம் பார்த்துக்கொண்டனர். 

வளர்குன்றத்தில் மருத்துவக்குழு

வளர்குன்றம் பகுதியில் உள்ளவர்களோ, ``கிராமத்தில் உள்ளவர்கள் சிலர் வயல்வெளிக்கும் வீட்டுக்கும் வாட்டர் கேனோடு திரிகிறார்கள். பெண்களின் நிலைமை கேட்கவே வேண்டாம். இப்பகுதியிலிருந்து வேலைக்குச் சென்ற நடத்துநர் ஒருவர் அடிக்கடி பேருந்தை நிறுத்தி இயற்கை உபாதையைக் கழித்திருக்கிறார். இதனால் பயணிகள் புலம்பி இருக்கிறார்கள். நிறைய இளைஞர்கள் வேலைக்குச் செல்லவே இல்லை. திறந்தவெளி கிணற்றை மூடவேண்டும். இதுதான் பிரச்னைக்கு முக்கியக் காரணம் எனப் பொதுமக்கள் தரப்பில் அதிகாரிகளுக்குக் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. செயல்படாத அரசு அலுவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். விஷயம் பெரிதான பிறகுதான் அதிகாரிகள் இந்தக் கிராமத்துக்கு வந்துள்ளார்கள்.” எனக் கிராம மக்கள் ஆதங்கத்தோடு தெரிவிக்கிறார்கள். 

லாரிகளில் தண்ணீர் சப்ளை

இதையடுத்து வருவாய்த்துறையினரும் சுகாதாரத் துறையினரும் அந்தக் கிராமத்தை ஆய்வு செய்து வருகிறார்கள். இதனால், லாரிகள் மூலம் அப்பகுதியினருக்குத் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வழக்கமாகத் தண்ணீர் விநியோகம் செய்யப்படும் கிணற்றிலிருந்து தண்ணீர் மாதிரி எடுத்து அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். மேலும், மருத்துவக்குழு அமைத்து வீடுவீடாகச் சென்று பாதிக்கப்பட்டவர்களைக் கணக்கெடுத்து, சிகிச்சை அளிக்கும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. 
கோடையை விட இந்தக் கொடுமை அப்பகுதியினரை வாட்டி எடுத்திருக்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க