தமிழகத்தைப் பாலைவனமாக மாற்ற நினைக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு! சேலத்தில் கொதித்த போராட்டக்காரர்கள்

சேலம் போராட்டம்

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமலும், தமிழகத்தில் மீத்தேன், ஈத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டம், ஸ்டெர்லைட் ஆலை போன்றவற்றைக் கொண்டு வந்து தமிழ் நாட்டை பாலைவனமாக மாற்ற நினைக்கும் மத்திய பாரதிய ஜனதா அரசைக் கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அதன் ஒருபகுதியாக சேலத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளர் ரமேஷ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டு சாலை மறியல் செய்ததோடு, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து, காவல்துறையினர் அவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் ரமேஷ் கூறுகையில், ``பல ஆண்டுகாலப் போராட்டத்துக்குப் பிறகு உச்சநீதிமன்றம், மத்திய அரசை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியும், மத்திய அரசு கண்டுகொள்ளாமல் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் இருந்து வருகிறது. மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட் போன்ற திட்டங்களைக் கொண்டுவந்து தமிழகத்தில் உள்ள இயற்கை வளங்களையும், ஆறு, தாதுமணல் போன்றவற்றை கொள்ளை அடித்து கொண்டுபோக திட்டம் வகுத்திருக்கிறது. இதனால் தமிழகம் பாலைவனமாக மாறப் போகிறது. இதையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசின் அடிமையாகவும், கைக்கூலியாகவும் இருந்து வருகிறார். இதையெல்லாம் கண்டித்து இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டோம்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!