காவிரிக்கான ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு! ஸ்டாலினுடன் கமல் சந்திப்பு | Kamal Meets MK Stalin in Chennai

வெளியிடப்பட்ட நேரம்: 21:09 (14/05/2018)

கடைசி தொடர்பு:21:09 (14/05/2018)

காவிரிக்கான ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு! ஸ்டாலினுடன் கமல் சந்திப்பு

சென்னையில் வரும் 19-ம் தேதி நடைபெறும் காவிரிக்கான தமிழகத்தின் குரல் ஆலோசனைக் கூட்டத்துக்கு தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்தார். 

ஸ்டாலின் - கமல் சந்திப்பு


காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவசாயிகள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தோர் பங்குபெறும் ஆலோசனைக் கூட்டத்துக்கு மக்கள் நீதி மய்யம் ஏற்பாடு செய்துள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலினை, அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துப் பேசிய கமல்ஹாசன், ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். 

சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல், ``காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்துத் தரப்பினரும் ஒற்றுமையாக இருந்து நமது குரலை நாட்டிற்கே எடுத்துரைக்கும் வகையில் அந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தேன். அதேபோல், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோரைக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளேன். நான் பேசியவரை யாருமே இந்தக் கூட்டத்தால் என்ன பயன் என்று கேட்கவில்லை. கூட்டத்தில் பங்கெடுப்பதாக ஒரு சிலர் வாக்குறுதியும் கொடுத்திருக்கிறார்கள். இந்த உரையாடல் தொடர வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு உண்டு. 

இந்த ஆலோசனைக் கூட்டதுக்கு ஆளுங்கட்சியையும் அழைப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளோம். அதேபோல், ரஜினியிடமும் தொடர்புகொண்டு அழைப்பு விடுக்கலாம் என நினைக்கிறேன். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அதையெல்லாம் மறந்துவிட்டு காவிரி விவகாரத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் நினைக்கிறது. இந்தக் கூட்டத்தின் தாக்கம் குறித்து பொறுத்திருந்து பாருங்கள்’ என்று கூறினார். காவிரி விவகாரம் தொடர்பாக தி.மு.க. தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் 17-ம் தேதி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.